ஒமைக்ரான் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை; பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு அளித்தது போல் ஒமைக்ரான் நோயாளிகளுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு அளித்தது போல் ஒமைக்ரான் நோயாளிகளுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை அச்சுறுத்தி, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.இதற்கிடையே உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் என்ற கொடிய வைரஸ் தென்ஆப்பிரிக்காவில் பரவியது. தற்போது இது 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் காலூன்றி தனது கோர தாண்டவத்தை ஆடி வருகிறது.
இந்தியாவில் முதன் முதலில் கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஆவார்.
மற்றொருவர் தென் ஆப்பிரிக்க நாட்டு முதியவர் ஆவார். இவர் பரிசோதனை செய்துவிட்டு தனது சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்டார். ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட டாக்டருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஒமைக்ரான் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் அரசு தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்னேற்பாடுகளையும் கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை
இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-
கர்நாடகத்தில் 2 பேர் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களில் டாக்டரான ஒருவர் மட்டும் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் வைரசின் வீரியம் பற்றிய முதற்கட்ட அறிக்கையை சுகாதாரத்துறையினர் அளித்துள்ளனர்.
அந்த வைரஸ் பற்றிய முழு அறிக்கையை விரைவாக வழங்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அத்துடன் ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கு மற்ற நாடுகளில் எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது பற்றிய முழுமையான தகவல்களை சேகரிக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இதற்கு முன்பு டெல்டா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையே, ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் தொடர வேண்டும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. ஆனாலும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுபோல், தற்போது ஒமைக்ரானுக்கு பாதித்தவர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கும்படியும், தனிக்கவனம் செலுத்தும் படியும் அறிவுறுத்தி உள்ளேன்.
பாதிப்பு ஏற்படாது
ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மையை கொண்டு இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அந்த வைரசால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் தீவிரமான சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளேன். 2 விதமான பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வரும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி, பள்ளி, கல்லூரி, விடுதிகள் உள்ளிட்ட பகுதி, பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் கட்டுக்குள் கொண்டு வரப்படும். பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்க கூடாது என்று பெங்களூரு மாநகராட்சி கமிஷனருக்கு தெரிவித்துள்ளேன். பள்ளி, கல்லூரிகளில் ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பினரும், அதுபோல், மாணவ, மாணவிகளின் பெற்றோர் கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்.
மந்திரி விளக்கம்
கொரோனா 2-வது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே கொரோனா பாதித்தவர்கள் உயிர் இழந்துள்ளனர் என்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்திருக்கிறார். அவர், எந்த சூழ்நிலையில் இந்த தகவலை கூறினார் என்பது பற்றி தெரியவில்லை. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 10 பேர் தலைமறைவாகி விட்டதாக சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
அதுபற்றி எனக்கு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. மந்திரி சுதாகருடன், இதுபற்றி பேசி தகவல்களை பெறுவேன். மந்திரி அரக ஞானேந்திரா அனைத்து போலீசாரையும் அவமதிக்கும் விதமாக பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். போலீசாருக்கு குடியிருப்பு வீடுகள் கிடைக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கவும் மந்திரி அரக ஞானேந்திரா தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story