சங்கரன்கோவிலில் மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சினால் கடும் நடவடிக்கை
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் முதல்நிலை நகராட்சியான சங்கரன்கோவில் பகுதியில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி மக்கள்தொகை 57,277 ஆகும். தற்போது மக்கள் தொகை 60,485 ஆக உள்ளது. நபர் ஒருவருக்கு 90 லிட்டர் என்ற அடிப்படையில் நகராட்சியின் தினசரி குடிநீர் தேவை 55 லட்சம் லிட்டர் ஆகும்.
நகராட்சிக்கு தற்போது கோட்டமலையாறு திட்டத்தின் மூலம் 8 லட்சம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 5 லட்சம், மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் 36 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. இவை முறையே திருவள்ளுவர் பூங்கா, பஸ்நிலையம், கழுகுமலை சாலை, கக்கன்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மூலம் வினியோகிக்கப்படுகிறது. 55 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைக்கு தற்போது தோராயமாக 49 லட்சம் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் குடிநீரை கொண்டு பொதுமக்களுக்கு சுழற்சி அடிப்படையில் 5 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 238 மண்டலமாக உள்ளது. இதனை குறைத்து 3 நாட்களுக்கு ஒருமுறை சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீரை உறிஞ்சுவது கண்டறியப்பட்டால், மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே சீராக குடிநீர் வழங்க நகராட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story