தனியார் பஸ் டிரைவர்கள் மிரட்டுகிறார்கள்; ஆட்டோ டிரைவர்கள் போலீசில் புகார்
வாகன நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி நாங்கள் வாழ்வாதாரம் இழக்கும் சூழ்நிலை இருப்பதாக ஆட்டோ டிரைவர்கள் கூறி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டையில் உள்ள பழைய தபால் நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இதை ஒட்டியுள்ள பகுதியில் பெரியபாளையம், சத்தியவேடு, திருப்பதி போன்ற பகுதியில் இருந்து வரும் திருவள்ளூர் செல்லும் தனியார் பஸ்கள் நின்று செல்வது வழக்கம். தனியார் பஸ்கள் நீண்ட நேரம் நின்றால் ஆட்டோக்களில் பயணிகள் ஏறமாட்டார்கள். இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
தனியார் பஸ்கள் நீண்ட நேரம் நிற்பது குறித்த விவகாரம் தொடர்பாக தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இதே போன்று தகராறு நடந்த போது அப்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தனியார் பஸ்கள் 5 நிமிடம் மட்டும் நின்று பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது சில தனியார் பஸ்கள் 15 முதல் 30 நிமிடங்கள் வரை சாலையோரம் நின்று பயணிகளை ஏற்றி செல்வதாக கூறப்படுகிறது. இதனால் வாகன நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி நாங்கள் வாழ்வாதாரம் இழக்கும் சூழ்நிலை இருப்பதாக ஆட்டோ டிரைவர்கள் கூறி வருகின்றனர். நீண்ட நேரம் பஸ்களை நிறுத்தக்கூடாது என்று ஆட்டோ டிரைவர்கள் கூறும்போது தனியார் பஸ் டிரைவர்கள் மிரட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஆட்டோ டிரைவர்கள் 50 பேர் ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன் ஆகியோரை சந்தித்து தனியார் பஸ் டிரைவர்கள் மிரட்டுவதாக புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு எடுப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் உறுதி அளித்தார். அதன் பேரில் ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story