கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்; 27 நாட்களாக பள்ளி செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு
திருவள்ளூர் அருகே எல்லப்பநாயுடு பேட்டை மற்றும் காந்தி கிராமம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 27 நாட்களாக பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் தவித்து வருகிறார்கள்.
உபரி நீர்
எல்லப்பநாயுடு பேட்டை, கொசஸ்தலை ஆற்றின் கரையை ஒட்டியும், காந்தி கிராமம் கொசஸ்தலை ஆற்று பகுதியில் இருந்து பூண்டி ஏரிக்கு செல்லும் கால்வாய் கரையை ஒட்டியும் உள்ளன.
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கிருஷ்ணாபுரம் அணையின் உபரி நீரும், பள்ளிப்பட்டு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் உபரி நீரும் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறது.
27 நாட்களுக்கு மேலாக....
இதனால் எல்லப்பநாயுடு பேட்டை தரைப்பாலம் நீரில் மூழ்கி உள்ளது. காந்தி கிராமம் பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கடந்த 27 நாட்களுக்கு மேலாக இந்தநிலை தொடர்கிறது. இதன் காரணமாக அந்த கிராமங்களில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்டோர் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலே முடங்கி உள்ளனர். இதில் 2 கிராமங்களில் உள்ள 70-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
கோரிக்கை
சில மாணவர்கள் மட்டும் ஆபத்தான முறையில் தரைப்பாலத்தை கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றார்கள். ஒவ்வொரு மழைக்காலங்களிலும் இந்தநிலை தொடர்கிறது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் எல்லப்பநாயுடு பேட்டை பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story