பாகற்காய் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு


பாகற்காய் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2021 7:53 PM IST (Updated: 5 Dec 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் சேறும், சகதியுமான விளைநிலங்களால் பாகற்காய் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கூடலூர்

தொடர் மழையால் சேறும், சகதியுமான விளைநிலங்களால் பாகற்காய் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தாமதமாக தொடங்கிய மழை

கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் இணையும் எல்லையில் கூடலூர் அமைந்து உள்ளது. இங்கு கேரளா, கர்நாடகா காலநிலைக்கு ஏற்ப ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதை கருத்தில் கொண்டு விவசாய பணிகளும் நடைபெற்று வருவது வாடிக்கை. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்ய தொடங்கியது.

இதையொட்டி நெல், இஞ்சி உள்ளிட்ட விவசாயமும் களை கட்டியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை மிகவும் காலதாமதமாக பெய்து வருகிறது. தற்போது பருவமழை முடிவடையும் என்று எதிர்பார்த்த நிலையில் கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் விளைந்த நெற்கதிர்கள் முளைத்து பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. 

விதைகளுக்கும் தட்டுப்பாடு

இதேபோன்று வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் பருவமழை முடிவடையும் என்பதால் கோடைகால பயிர்களை நடவு செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை காலம் தவறி தொடர்ந்து பெய்து வருவதால் அந்த விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக இனிவரும் மாதங்கள் கோடைக்காலம் என்பதால் கூடலூர் பகுதியில் ஏக்கர் கணக்கில் பாகற்காய் விவசாயம் களை கட்ட தொடங்கும். ஆனால் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய நிலம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. 

மேலும் வீரிய ரக பாகற்காய் விதைகளுக்கும் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பாகற்காய் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. குறிப்பாக கூடலூர் பகுதியில் உள்ள அள்ளுர் வயல், தொரப்பள்ளி, புத்தூர்வயல், கம்மாத்தி, பாடந்தொரை மற்றும் ஸ்ரீமதுரை, முதுமலை உள்ளிட்ட இடங்களில் பாகற்காய் பயிரிட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 

பருவம் தவறி விளைச்சல்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கூடலூரில் ஆண்டுதோறும் நேந்திரன் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது வாழை, பச்சை தேயிலை உள்ளிட்டவற்றுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. ஆனால் கோடைக்கால பயிரான பாகற்காய் சாகுபடிக்கு பராமரிப்பு குறைவு. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பருவமழை முடிவடையும் சமயத்தில் பாகற்காய் சாகுபடி செய்யப்பட்டு பந்தல்கள் அமைக்கப்படும். 

இதன் மூலம் கணிசமான வருவாய் ஈட்டப்படும். இங்கு விளையும் பாகற்காய்க்கு கேரளாவில் நல்ல விலை கிடைக்கிறது. ஆனால் இந்தஆண்டில் காலம் தவறி பருவமழை செய்து கொண்டே இருக்கிறது. இதனால் பாகற்காய் விதைகளை விதைக்க முடியாத வகையில் நிலம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பருவம் தவறி பாகற்காய் விளைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story