கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி விடுதிகளில் தங்கி படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் தங்கி படிக்க மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
39 விடுதிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 27 பள்ளி மாணவர் விடுதிகள், 11 பள்ளி மாணவியர் விடுதிகள், 1 ஐ.டி.ஐ. விடுதி என மொத்தம் 39 விடுதிகளில் தங்கி படிக்க 2021-2022-ம் கல்வியாண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளபடி 85 சதவீதம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், 10 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 5 சதவீதம் விகிதாச்சார அடிப்படையில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழுவு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதிகள்
விடுதிகளில் சேர்வதற்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் விடுதிகளில் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவர்.
மாணவர்கள் தங்களது இருப்பிடத்திற்கும் பள்ளிக்கும் உள்ள இடைவெளி 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதி மாணவிகளுக்கு பொருந்தாது. பள்ளி மற்றும் ஐ.டி.ஐ.தொழிற் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் விடுதியில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அதை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story