மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு


மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 5 Dec 2021 9:35 PM IST (Updated: 5 Dec 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பூர், 
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ந் தேதியான இன்று (திங்கட்கிழமை) திருப்பூர் மாநகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனை சாவடிகள், மாநகரின் முக்கிய இடங்கள், சாலை சந்திப்புகளில் போலீசார் தொடர் பாதுகாப்பிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு பணியில் மாநகரில் சுமாா் 300-க்கும் அதிகமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். தொடர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்கவும், வாகன ஓட்டிகள், பயணிகள், அவர்களது உடமைகளை தீவிர சோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
தீவிர சோதனை
திருப்பூரில் பழைய, புதிய பஸ் நிலையங்கள், கோவில்வழி, யுனிவர்செல் ரோடு பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி சந்திப்பு, குமரன் சிலை, சி.டி.சி. கார்னர், புஷ்பா ரவுண்டானா சந்திப்பு, உள்ளிட்ட முக்கிய இடங்களிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக  நேற்று திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினரும், ரெயில்வே போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரெயில் மூலம் திருப்பூருக்கு வந்த  பயணிகளின் உடமைகள் கடும் சோதனை செய்யப்பட்டது. ரெயில் மூலம் அனுப்பப்படும் சரக்கு பார்சல்களும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெறுகிறது. வாகனங்களின் வருபவர்களின் தகவல்களை போலீசார்சேகரித்து வருகிறார்கள். மாவட்டத்தில் இருந்து வெளியில் செல்பவர்கள் எதற்காக செல்கிறார்கள் என்றும், மாவட்டத்திற்குள் வருபவர்கள் என்ன காரணத்திற்காக வருகிறார்கள் என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

Next Story