அரசு கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்
அரசு கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்
தளி,
பெரியவாளடியில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கால்நடை மருந்தகம்
உடுமலை தாலுகாவிற்கு உட்பட்ட பெரியவாளவாடி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் சாகுபடி பணிகளுடன் சேர்த்து கால்நடை வளர்ப்பையும் உபதொழிலாக செய்து வருகின்றனர். கால்நடை வளர்ப்பு நிரந்தர வருமானத்தை அளிக்கக் கூடியது என்பதால் விவசாயிகளுடன் கூலித்தொழிலாளர்களும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
கால்நடைகளுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வாளவாடி பகுதியில் கால்நடை மருந்தகம் தோற்றுவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் கால்நடைகளை அங்கு கொண்டு சென்று தற்போது வரையிலும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கால்நடை மருத்துவமனையாக...
இது குறித்து கால்நடை வளர்ப்பவர்கள் கூறியதாவது:-
கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைக்கின்ற அன்றாட வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றோம். ஆரம்ப காலத்தில் இருந்த கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இந்த மருந்தகம் கட்டப்பட்டது. ஆனால் இன்று கால்நடை வளர்ப்பு முழுநேர தொழிலாக உள்ளதால் அதில் ஏராளமானவர் கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கால்நடைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிப்பதும் மருந்தகத்தை தரம் உயர்த்த வேண்டியதும் அவசியமாக உள்ளது. மருந்தகமாக உள்ள காரணத்தினால் முழுநேர மருத்துவர் பணியமர்த்தப்படவில்லை என்பதால் கால்நடைகளுக்கு குறித்த காலத்தில் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டால் முழுநேர மருத்துவரும் உயர்தர சிகிச்சைக்கான உபகரணங்களும் கிடைக்கும்.
இதனால் கால்நடைகளுக்கு அவசர கால மற்றும் தரமான சிகிச்சை அளித்து நோயிலிருந்து எளிதில் காப்பாற்ற முடியும். எனவே வாளவாடி பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story