கேரளாவுக்கு நடைபயணம் செல்ல முயன்ற 5 மாவட்ட விவசாயிகள்; போலீசார் தடுத்து நிறுத்தியதால் தர்ணா


கேரளாவுக்கு நடைபயணம் செல்ல முயன்ற  5 மாவட்ட விவசாயிகள்; போலீசார் தடுத்து நிறுத்தியதால் தர்ணா
x
தினத்தந்தி 5 Dec 2021 10:02 PM IST (Updated: 5 Dec 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தி 5 மாவட்ட விவசாயிகள் கேரளாவுக்கு நடைபயணம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தி 5 மாவட்ட விவசாயிகள் கேரளாவுக்கு நடைபயணம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தர்ணாவில் ஈடுபட்டனர்.
முல்லைப்பெரியாறு அணை
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைத்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. 
மேலும் பேபி அணையை பலப்படுத்திவிட்டு, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருந்தது. இதற்கிடையே அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 கேரளாவுக்கு நடைபயணம்
இதேபோல் முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக தவறான கருத்துகளை பரப்பி வருவதாக கேரளாவை சேர்ந்த வக்கீல் ரசூல்ஜோயை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், அணை தொடர்பாக பொய் பிரசாரம் செய்து வரும் கேரளா பிரிகேட் என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும், அணை பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 மாவட்ட விவசாயிகள் கேரளாவுக்கு நடைபயணம் செல்ல முடிவு செய்தனர். 
அதன்படி, 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் நேற்று தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் மணிமண்டபம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள், மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
 தடுத்து நிறுத்தம்
இதைத்தொடர்ந்து விவசாயிகள், அங்கிருந்து கேரளா செல்வதற்காக குமுளி நோக்கி நடைபயணம் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார், கேரளாவுக்கு செல்ல முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். 
மேலும் லோயர்கேம்ப்-குமுளி சாலையின் நடுவே தடுப்பு கம்பிகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் எஸ்.ஆர்.தேவர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் முன்னிலை வகித்தார். 
இதில், தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறிப்பாக கேரளாவில் முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வலியுறுத்தி நடைபெறும் இருசக்கர வாகன பேரணியை தடுத்து நிறுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். 
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுனன் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு தெரியபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 
இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story