போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் மர்ம சாவு


போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் மர்ம சாவு
x
தினத்தந்தி 5 Dec 2021 10:14 PM IST (Updated: 5 Dec 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரை போலீசார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரை போலீசார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
வாகன சோதனை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் போலீஸ் நிலைய போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் நண்பருடன் வந்த நீர்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த  கல்லூரி மாணவர் மணிகண்டன்(வயது 22) நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை பின்தொடர்ந்து சென்று பிடித்தனர். பின்னர் மணிகண்டனை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
போலீசார் விசாரணைக்கு பின்னர் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் மணிகண்டன் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது மாணவரை துன்புறுத்தி அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கு போலீசார் தரப்பில், மணிகண்டனை நாங்கள் தாக்கவில்லை என தெரிவித்தனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் மாணவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு மருத்துவமனை முன்பு முதுகுளத்தூர்-பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதையடுத்து ராமநாதபுரம் குற்றப்பிரிவு  துணை போலீஸ் சூப்பிரண்டு திருமலை மற்றும் முதுகுளத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர்.

Next Story