அகழி நீர் வெளியேறும் பகுதியில் அடைப்பு உள்ளததால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.
வேலூர் கோட்டை அகழி நீர் வெளியேறும் பகுதியில் தான் அடைப்பு உள்ளது. அதனால் 5 நாட்களாக போராடியும் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
வேலூர் கோட்டை அகழி நீர் வெளியேறும் பகுதியில் அடைப்பு உள்ளதால் 5 நாட்களாக போராடியும் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவிலில் தேங்கிய தண்ணீர்
வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக கோட்டை அகழியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் முட்டியளவு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. கோவில் அபிஷேகநீர் வெளியேறும் பகுதி வழியாக அகழிநீர் கோவிலுக்குள் புகுந்து விடுகிறது.
அந்த தண்ணீரை மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனாலும் அகழிநீர் கோவிலுக்குள் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக உற்சவர் மற்றும் அம்மன் கோவில் ராஜகோபுரத்திற்கு வெளியே நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
உபரிநீர் வெளியேறும் கால்வாய்
வேலூர் கோட்டை அகழி உபரிநீரை வெளியேற்றும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் கடந்த 1-ந் தேதி முதல் அகழி உபரிநீரை வெளியேற்றும்பணியில் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்துறை, தொல்லியல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். வேலூர் கோட்டை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது அகழி உபரிநீர் பாலாற்றுடன் கலக்கும் வகையில் மதகுகளுடன் கூடிய கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் வேலூர்-பெங்களூரு சாலையின் அடியில் கடந்து புதிய மீன்மார்க்கெட் அருகே உள்ள கால்வாய் வழியாக நிக்கல்சன் கால்வாயுடன் இணைந்து பாலாற்றுக்கு செல்கிறது.
மீன்மார்க்கெட் அருகே உள்ள கால்வாயில் 20 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டு, அகழி நீர் வெளியேறும் பகுதி கண்டறியப்பட்டது. ஆனால் அந்த கால்வாய் பகுதியில் பக்கவாட்டில் சிறிய அளவிலான சுவர் இருப்பதால் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த பகுதியில் பள்ளம் தோண்ட முடியாத நிலை ஏற்பட்டது. தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் நிரம்பியது. அவை மாநகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.
அகழி பகுதியில் அடைப்பு
இந்த நிலையில் 5-வது நாளான நேற்று பெரிய மற்றும் சிறிய அளவிலான பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடந்தது. சிறிய பொக்லைன் எந்திரம் மூலம் அகழியில் இருந்து நீர்வரும் கால்வாயின் உள்பகுதியில் சுமார் 10 அடி தூரம் வரையிலான அடைப்புகள் எடுக்கப்பட்டன. பின்னர் காற்று மூலம் கால்வாயின் உள்பகுதியில் பலமுறை தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. கால்வாய் வழியாக சிறிதளவே தண்ணீர் வெளியேறின. 5 நாட்களாக போராடியும் கோட்டை அகழியில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி நேற்றும் தோல்வியடைந்தது.
இதுகுறித்து மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மீன்மார்க்கெட் பகுதியில் உள்ள கால்வாயின் உள்பகுதியில் காணப்பட்ட அடைப்புகள் தூர்வாரப்பட்டு, காற்று மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியின் வழியாக இரும்பு குழாய் உள்ளே செலுத்தி அடைப்பு காணப்படும் இடம் குறித்து கண்டறியப்பட்டது. அகழியில் இருந்து நீர் வெளியேறும் பகுதியில் தான் அடைப்பு காணப்படுகிறது. அதனால் தான் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியவில்லை. இன்று (திங்கட்கிழமை) ஆழ்துளை கிணறு அமைக்கும் எந்திரம் மூலம் கால்வாயின் பக்கவாட்டு வழியாக இரும்பு குழாய் செலுத்தி அடைப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story