வாலிபரை போலீசார் தாக்கியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் மணல்மேட்டில் பரபரப்பு
மணல்மேட்டில் வாலிபரை போலீசார் தாக்கியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை:-
மணல்மேட்டில் வாலிபரை போலீசார் தாக்கியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாராயம் விற்பனை
மயிலாடுதுறை அருகே மணல்மேடு ராஜசூரியன் பேட்டையில் சாராயம் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணல்மேடு போலீஸ் நிலையத்தில் இருந்து 2 போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்றனர். அப்போது சாராயம் விற்பனை செய்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த மேலத்தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது32) என்பவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த சுரேஷ் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு வேறு ஒரு வாலிபரை போலீசார் தாக்கியதை கண்டித்து ராஜசூரியன்பேட்டை கிராமமக்கள் மணல்மேடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது சுரேசை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் அங்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டம் காரணமாக அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story