முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
கூடலூர்:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்கி வருகிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அதன்படி, அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 142 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு குறைப்பு
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்தும் வெகுவாக குறைந்தது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நேற்று முதல் குறைக்கப்பட்டது.
அதன்படி, அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,867 கனஅடியில் இருந்து 1,344 கன அடியாகவும், கேரளாவுக்கு வினாடிக்கு 1,727 கன அடியில் இருந்து 1,062 கன அடியாகவும் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மழை அளவு
மேலும் நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருந்தது. மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 406 கன அடியாக குறைந்தது.
தேனி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:-
முல்லைப்பெரியாறு 2.6, தேக்கடி 1.6, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 23.4, வைகை அணை 1, வீரபாண்டி 38, சோத்துப்பாறை 36, பெரியகுளம் 12, போடி 33.8, அரண்மனைப்புதூர் 18.2, ஆண்டிப்பட்டி 3.8.
Related Tags :
Next Story