‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீர் குழாயில் அடைப்பு
பாளையங்கோட்டை பெருமாள்புரம் அருகில் உள்ள பொதிகை நகரில் 10 நாட்களுக்கு மேலாக கழிவுநீர் செல்லும் பிரதான குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் குளிக்க மற்றும் கழிவறை செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் குழாய்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர் எதிர்த்து திரும்பவும் வீடுகளுக்குள் சென்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே கழிவுநீர் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோமதிநாயகம், பொதிகைநகர்.
குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீர்
பாளையங்கோட்டை திருமால்நகர் அருகே வள்ளுவர் காலனி விரிவாக்கம் தெருவில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. தற்போதுள்ள அந்த மண் சாலையில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் கசிந்து அதில் கலக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மழைநீரை அகற்றி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- கார்த்திகை மாலா, வள்ளுவர் காலனி.
நாய் தொல்லை
நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் மிகவும் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கா.முகம்மது இலியாஸ், ஏர்வாடி.
காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுத்தெரு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தப்படும் குடிநீர் தொட்டியும் கடந்த 4 மாதங்களாக பயன்பாடு இ்ல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே குடிநீர் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- சிவமாரியப்பன், புதுத்தெரு.
நோய் தொற்று பரவும் அபாயம்
கடையம் யூனியனுக்கு உட்பட்ட தர்மபுரம் மடம் பள்ளிக்கூட தெருவில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தேங்காத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்.
- முகம்மது முபீன், சம்பன்குளம்.
பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்
கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து அம்பாநகரில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் உள்ளது. இங்கு மின்மோட்டார் பழுதால் கடந்த 3 மாதங்களாக சுகாதார வளாகம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே மின்மோட்டார் பழுதை நீக்கி சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- கே.திருக்குமரன், கடையம்.
சர்வீஸ் ரோட்டில் பள்ளம்
தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் கிராமம், நெல்லை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு பஸ்நிறுத்தம் அமைந்துள்ள சர்வீஸ் ரோட்டில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்கள் உள்ளே வராமல் மெயின் ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளத்தில் மழைநீர் தேங்குவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழும் நிலையும் உள்ளது. எனவே இந்த பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.கணேசன், வசவப்பபுரம்.
குண்டும், குழியுமான சாலை
நாசரேத்தில் ரெயில்வே கேட் முதல் சந்திப்பு வரை பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- அமுதன், நாசரேத்.
பயணிகள் அவதி
தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால், பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக வயதானவர்கள் கீழே விழும் நிலை உள்ளது. எனவே இதனை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- எஸ்.உடையார், புதுக்கோட்டை.
Related Tags :
Next Story