அதிக விலைக்கு உரம் விற்பனை


அதிக விலைக்கு உரம் விற்பனை
x
தினத்தந்தி 5 Dec 2021 10:56 PM IST (Updated: 5 Dec 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பகுதியில் தட்டுப்பாடு காரணமாக தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

காரைக்குடி, 
காரைக்குடி பகுதியில் தட்டுப்பாடு காரணமாக தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதால் அவற்றை வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தட்டுப்பாடு
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து தற்போது அனைத்து கண்மாய்களும் நிரம்பியதால் அவற்றை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தநிலையில் ஏற்கனவே பெய்த மழையை பயன்படுத்தி முன்கூட்டியே பயிரிட்ட விவசாயிகள் தற்போது பயிருக்கு தேவையான உரங்களை வாங்குவதற்காக அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை நாடி வருகின்றனர். இந்தநிலையில் பல்வேறு வங்கிகளில் உர தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் விவசாயிகள் அதிக விலை கொடுத்து தனியார் உரக்கடைகளில் வாங்கி வருகின்றனர். 
விளைச்சல்
காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றிய பகுதிகளிலும் நெல் பயிர்களுக்கு தேவையான உரங்கள் அரசு தொடக்க வேளாண்மை வங்கிகளில் கிடைக்காததால் தற்போது தனியார் உரக்கடைகளை நோக்கி விவசாயிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதை பயன்படுத்திக்கொண்ட சில தனியார் உரக்கடைகளில் உரங்களில் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து  ஊராட்சி  தலைவர் தனபால் கூறியதாவது:- நெல் பயிரிட்டு 80 நாட்கள் ஆகிவிட்டது. பொதுவாக 70 நாட்களில் பயிரிட்ட நெல் பயிருக்கு பொட்டாஷ் உரம் போட வேண்டும். அப்போது தான் அதிக விளைச்சலை பெற முடியும். இந்தநிலையில் சாக்கோட்டை பகுதியில் உள்ள அரசு வங்கியில் தேவையான உரம் இருப்பு இல்லாததால் விவசாயிகள் தனியார் கடையில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. 
அதிக விலை
அரசு தொடக்க வேளாண்மை சங்கத்தில் பொட்டாஷ் ரூ.875 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தனியார் கடையில் ரூ.1400 முதல் ரூ.1800 வரை விற்பனை செய்கின்றனர். இதேபால் டி.ஏ.பி. உரம் ரூ.1200-க்கு விற்பனை செய்யப் பட்டதை தனியார் கடையில் ரூ.1700-ம், அதனுடன் நுண்ணூட்ட உரத்தையும் சேர்த்து வழங்குகின்றனர். இதேபோல் யூரியா விலை ரூ.266.60ஆக இருந்தது தற்போது தனியார் கடையில் ரூ.300-ம், காம்ப்ளக்ஸ் உரம்  தனியார் உரக்கடையில் ரூ.1350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள அரசு வேளாண்மை சங்கத்தில் போதிய அளவில் உரங்களை விற்பனை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story