போலீஸ் துன்புறுத்தலால் மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலையா? போலீஸ் கமிஷனர் விளக்கம்


போலீஸ் துன்புறுத்தலால் மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலையா? போலீஸ் கமிஷனர் விளக்கம்
x
தினத்தந்தி 5 Dec 2021 11:50 PM IST (Updated: 5 Dec 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

லஞ்ச ஒழிப்பு போலீசார் துன்புறுத்தலால் மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலையா? என்பது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் (வயது 62) கடந்த 2-ந்தேதி சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.13 லட்சம், 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி, 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வெங்கடாச்சலம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

எனவே வெங்கடாச்சலம், போலீசார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் அவரது சாவில் சந்தேகங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சங்கர் ஜிவால் பேட்டி

இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கில் சந்தேகங்கள் இருப்பதாக நிறைய பேர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சம்பவத்தன்று வெங்கடாச்சலம் மதியம் 12 மணியளவில் காலை உணவை சாப்பிட்டுவிட்டு முதல் தளத்தில் உள்ள அவரது அறைக்கு சென்று இருக்கிறார். மதிய உணவு சாப்பிடுவதற்கு வராததால் அவரது மனைவி மதியம் 3 மணிக்கு அறைக்கு சென்று இருக்கிறார். அறை கதவை தட்டியும் திறக்காததால் மாலை 4 மணியளவில் அவரது மனைவி சிலரை அழைத்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.

அப்போது வெங்கடாச்சலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வேறு எந்த சந்தேகமும் தெரியவில்லை. தற்கொலை மட்டும்தான் தெரிகிறது. மேலும் விசாரணையில் ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்தால் அதுபற்றி விளக்கமாக சொல்கிறோம். தற்போது வெங்கடாச்சலத்தின் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தடயவியல் சோதனை

வெங்கடாச்சலம் பயன்படுத்திய செல்போன், டேப் ஆகியவற்றை பறிமுதல் செய்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். தடயவியல் சோதனை அறிக்கை வந்தவுடன் அதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். பிரேத பரிசோதனை செய்தபோது எந்தவித சந்தேகங்களும் சொல்லப்படவில்லை. எனினும் பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை வர வேண்டி உள்ளது.

வெங்கடாச்சலம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது. அவரது மனைவி கொடுத்த புகாரில் அவரது சாவில் எந்தவித சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளையும் குறிப்பிடவில்லை. பொதுவாக நாங்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அவருக்கு எந்தவித துன்புறுத்தலும் தரவில்லை. வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரி அவரிடம் எப்போது விசாரணைக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று மட்டும் போனில் கேட்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை

லஞ்ச ஒழிப்பு போலீசார் துன்புறுத்தல்தான் காரணம் என்று கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. மேலும் இதுமாதிரி புகாரும் வரவில்லை. தற்போது வரை தற்கொலை வழக்குப்பதிவு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும். வெங்கடாச்சலம் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய மனைவி, உறவினர்கள் யாரும் புகார் கூறவில்லை. எனினும் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் அதிகாரி வீட்டில் கொள்ளை

அப்போது கமிஷனர் சங்கர் ஜிவாலிடம், சமீபத்தில் மரணமடைந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி நல்லம்ம நாயுடு வீட்டில் கொள்ளை போய் உள்ளது. அவருடைய வீட்டுக்கு தினமும் ‘பீட்’ போலீசார் செல்லவில்லை என்று கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘ அங்கு தேங்கிய மழைநீரால் போலீசார் செல்ல முடியவில்லை. வைர கம்பல், 7 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போய் உள்ளதாக புகாரில் கூறியுள்ளனர். விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.’ என்றார்.

அ.தி.மு.க. பிரச்சினையில்...

அ.தி.மு.க. அலுவலகத்தில் தினமும் பிரச்சினை போய் கொண்டிருக்கிறதே? என்று கேட்டதற்கு, ‘பொது இடத்தில் இப்படி பிரச்சினை ஏற்பட்டால் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் பாதுகாப்பு போடுவோம். கட்சி அலுவலகத்தில் நடைபெறும் பிரச்சினை தொடர்பாக புகார்கள் வந்தால் வழக்கு போடுவோம். நேற்று (நேற்று முன்தினம்) ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

Next Story