புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 Dec 2021 1:44 AM IST (Updated: 6 Dec 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் பிரச்சினை
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீைர விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி குடிநீர் பிரச்சினையை தீர்ப்பார்களா?
குமார், சாத்தூர்
.
பயணிகள் நிழற்குடை தேவை
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. முதியவர்களும், கர்ப்பிணிகளும் நீண்ட நேரம் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.
சிவா, மதுரை.

ஆபத்தான மேல்நிலை தொட்டி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா வைகை வடகரை பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆங்காங்கே உடைந்து காணப்படுகிறது. அது எப்போது இடிந்து விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு ஆபத்தான தொட்டியை அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும்.
கார்த்தி, வைகை வடகரை.

குண்டும், குழியுமான சாலை
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இருந்து நெல்பேட்டை சந்திப்பு வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி குண்டும், குழியுமான சாலையை சீரமைப்பார்களா?
சந்திரகுமார், வில்லாபுரம்.

சுகாதார சீர்கேடு
மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் விரகனூர் சுற்றுச்சாலை அருகில் சாலையோரத்தில் கோழிக்கழிவுகள், குப்பை கழிவுகள், இறைச்சி கழிவுகளை அதிக அளவில் கொட்டி செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாக உள்ளது. துர்நாற்றம் காரணமாக இவ்வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரமூர்த்தி, மதுரை.

பஸ் வசதி வேண்டும்
சிவகங்கை மாவட்டம் மாத்தூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ தேவைகளுக்காக பலர் மதுரைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்களும், மாணவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
பொதுமக்கள், மாத்தூர்.

ஆபத்தான மின்கம்பம்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கேசம்பட்டியில் உள்ள மின்கம்பம் ஒன்று பழுதடைந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, இரும்பி கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. மேலும் அடிப்பகுதி முழுவதும் உடைந்து காணப்படுகிறது. மின்கம்பம் எப்போது விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே, ஆபத்தான அந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
ஜீவா, கேசம்பட்டி.

சேறும், சகதியுமான சாலை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ராஜகோபாலபுரம் கிராமத்தில் ராஜகணபதி நகர், குபேரலட்சுமி நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சரவணன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

Next Story