போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி


போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி
x
தினத்தந்தி 6 Dec 2021 1:46 AM IST (Updated: 6 Dec 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே போலீஸ் நிைலயத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருக்காட்டுப்பள்ளி:
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே போலீஸ் நிைலயத்தில்  சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 
வாகன சோதனை 
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தோகூர் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை நேற்று முன்தினம் இரவு போலீஸ் நிலையம் அருகே  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு ஸ்கூட்டரில் 4 வாலிபர்கள் வந்தனர்.  ஒரு ஸ்கூட்டரில் 4 வாலிபர்கள் வந்ததால் அவர்களை தடுத்து நிறுத்திய சப்-இஸ்பெக்டர் அய்யாபிள்ளை அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து முகவரியை கேட்டு எழுதிக்கொண்டிருந்தார். 
தாக்க முயற்சி
அப்போது அந்த வாலிபர்களில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த இரும்பாலான ஆயுதத்தால் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளையை தாக்க முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்தின் உள்ளே புகுந்துகொண்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 4 வாலிபர்களும் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர். 
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தப்பி ஓடிய வாலிபர்களை தோகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். 
கைது
அப்போது தப்பி ஓடிய வாலிபர்களில் ஒருவரான திருச்சி பெல் டவுன்சிப் பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் மகன் நரேஷ்ராஜு(வயது22)  என்பவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்தனர். அவரை தோகூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். 
விசாரணையில் தப்பி ஓடியவர்கள் திருச்சி துவாக்குடி மலை பகுதியை சேர்ந்த ரூபன்(21), அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த சாந்தகுமார்(21), வினித்(21) என தெரியவந்தது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை தோகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேஷ்ராஜுவை கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரையும் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி தலைமையிலான குழுவினர் தேடி வந்தனர். இந்தநிலையில் திருவெறும்பூரில் வினித்தை (21) போலீசார் கைது செய்து தோகூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். 
பாதுகாப்பு ஏற்பாடுகள் 
திருச்சி நவல்பட்டு போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்டு அந்த பரபரப்பு அடங்குவதற்கு தற்போது தோகூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயன்ற சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தஞ்சை மாவட்டம் தோகூர் போலீஸ் நிலைய எல்லையில் கல்லணை உள்ளது. இங்கு வரும் வாலிபர்கள் இரவு நேரத்தில் கல்லணை- கொள்ளிடம் புதிய பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கூட்டமாக நின்று மது அருந்துகிறார்கள். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி பாலத்தில் மது அருந்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story