அன்னாசி பழங்களின் கொள்முதல் விலை உயர்வு


அன்னாசி பழங்களின் கொள்முதல் விலை உயர்வு
x
தினத்தந்தி 6 Dec 2021 1:49 AM IST (Updated: 6 Dec 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அன்னாசி பழங்களின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குலசேகரம்:
 குமரி மாவட்டத்தில் அன்னாசி பழங்களின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அன்னாசி பழம்
குமரி மாவட்டம் நெல், வாழை, தென்னை, மலர்கள், கிராம்பு, ரம்புட்டான், மங்குஸ்தான், எலுமிச்சை, காபி, கோகோ, மிளகு,  ரப்பர், அன்னாசி என பலவகையான பயிர்கள் சாகுபடிக்கு உகந்த மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையும், நிலவியல் அமைப்புகளும், நீர்வளமும் இப்பயிர்களுக்கு ஏற்றதாக உள்ளது.
குமரி மாவட்டத்தில்  முன்காலங்களில் வேலிப்பயிராகவும், இதர பயிர்கள் நடவு செய்யமுடியாத மலைக்குன்றுகளிலும் மட்டுமே நடவு செய்யப்பட்டு வந்த அன்னாசி, நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் வந்த பிறகு, தற்போது சமவெளிப்பகுதிகளிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.  குறிப்பாக மாவட்டத்தில் தற்போது ரப்பர் புது நடவு மற்றும் மறு நடவு செய்யப்படும் தோட்டங்களில் 3 ஆண்டுகள் அன்னாசி ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது. 
பராமரிப்பு செலவு குறைவு
அன்னாசி வறட்சியை தாங்கி வளரும் என்பதாலும், காற்று மற்றும் மழையால் அதிக பாதிப்புகளோ, சேதமோ அடையாது என்பதாலும், வாழையை விட பராமரிப்பு செலவு மிக்குறைவு என்பதாலும் அன்னாசி சாகுபடியில் தற்போது விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் அரசு ரப்பர் கழகம் மற்றும் பெரும் தனியார் ரப்பர் தோட்டங்களிலும் தற்போது ரப்பருக்கு ஊடுபயிராக அன்னாசி மட்டுமே நடவு செய்யப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் அன்னாசிப் பழங்கள் சென்னை கோயம்ேபடு சந்தை, ஐதராபாத் மற்றும் புதுடில்லி உள்ளிட்ட இடங்களுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
விலை உயர்வு
கொரோனா தீவிரமாக இருந்த காலத்திலும் அதனை தொடர்ந்து தொடர் கன மழையாலும், விலை வீழ்ச்சியை கண்டிருந்த அன்னாசி பழங்களின் விலை தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராத நிலையில்   கிலோ ரூ.15- க்கும் கீழே விற்பனையான அன்னாசிப் பழங்கள் தற்போது  ரூ. 22-க்கு  கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு அன்னாசி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இதனால் உற்சாகமாக பழங்களை அறுவடை செய்து மொத்த வியாபாரிகளுக்கு கொடுக்கின்றனர்.
சிறிதளவு லாபம்
மலைவிளையை சேர்ந்த அன்னாசி விவசாயி தனபாலன், ‘நான், அயக்கோடு அருகே மண்விளை பகுதியில் சுமார் 10 ஏக்கரில் ரப்பர் தோட்டத்தில் குத்தகை எடுத்து ஊடுபயிராக அன்னாசி நடவு செய்துள்ளேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள்  வராததால் பழங்கள் செடிகளிலேயே அழுகும் நிலை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வருகின்றனர். மொத்த விலையாக தற்போது கிலோவிற்கு ரூ. 22 வரை கிடைக்கிறது. ஆனால் ஒரு கிலோ பழத்திற்கு குறைந்த பட்சம் ரூ. 35 கிடைக்க வேண்டும். தற்போது கிடைக்கும் விலையால் சிறிதளவு லாபம் கிடைக்கும்’ என்றார்.
முன்னோடி விவசாயி கொட்டூர் பி. ஹென்றி, ‘அன்னாசி  சாகுபடியில் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் வந்துள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் அன்னாசி சாகுபடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டத்தில், சுமார் 5 ஆயிரம் எக்டேர் வரை அன்னாசி பயிரிடப் படுகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் தொழிலாக அன்னாசி விவசாயம் மாறியுள்ளது. அன்னாசிப் பழங்களில் விலையை கேரள மாநிலத்திலுள்ள வாழக்குளம் சந்தை தீர்மானிக்கிறது. தற்போது வடமாநிலங்களும், சென்னை கோயம் பேடு சந்தைக்கும் பழங்கள் செல்லத் தொடங்கிய நிலையில் விலை சற்று அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக அன்னாசிப் பழங்கள் மனித உடலில் நோய்  எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதால், கொரோனாவுக்குப் பிறகு அன்னாசி பழங்கள் உண்ணும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது’ என்றார்.

Next Story