முட்புதருக்குள் கார் கவிழ்ந்தது; போதகர் பரிதாப சாவு


முட்புதருக்குள் கார் கவிழ்ந்தது;  போதகர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 6 Dec 2021 2:13 AM IST (Updated: 6 Dec 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

தென்தாமரைகுளம் அருகே முட்புதருக்குள் கார் கவிழ்ந்தது. இதில் போதகர் பரிதாபமாக இறந்தார். பேரன் படுகாயம் அடைந்தார்.

தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளம் அருகே முட்புதருக்குள் கார் கவிழ்ந்தது. இதில் போதகர் பரிதாபமாக இறந்தார். பேரன் படுகாயம் அடைந்தார்.
கார் கவிழ்ந்தது
வடக்கு தாமரை குளத்தில் இருந்து கீழ மணக்குடி நோக்கி நேற்று காலை சொகுசு கார் ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த கார் தென்தாமரைகுளம் அருகே உள்ள ஆண்டிவிளை பகுதியில் வரும் போது, உப்பள சூப்பிரண்டு அலுவலக திருப்பத்தில் நிலைதடுமாறி, மதில் சுவரை உடைத்து கொண்டு சுமார் 200 மீட்டர் தூரம் முட்புதருக்குள் சென்று கவிழ்ந்தது. 
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது காரில் முதியவரும், வாலிபரும் படுகாயத்துடன், ஆபத்தான நிலையில் இருந்தனர். உடனே கார் கண்ணாடியை உடைத்து 2 பேரையும் பொதுமக்கள் மீட்டனர்.
போதகர் சாவு
அதைத்தொடர்ந்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மீட்கப்பட்ட 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் முதியவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் வடக்கு தாமரைகுளம் அருகே உள்ள அட்டக்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போதகர் அய்யா பிள்ளை (வயது 70) என்பதும், படுகாயம் அடைந்தவர் அவருடைய பேரன் செல்வின் (19) என்பதும் தெரியவந்தது. செல்வின் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த செல்வின் மீது தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அறிவிப்பு பலகை 
தென்தாமரைகுளம் அருகே விபத்து நடந்த ஆண்டிவிளை சாலை திருப்பத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் ஒரு சொகுசு கார் கவிழ்ந்தது. இதில் ரோட்டில் நடந்து வந்த 2 பேர் மற்றும் காரில் இருந்தவர் என 3 பேர் படுகாயம் அடைந்தனர். 
மேலும் இந்த இடத்தில் இருசக்கர வாகனங்களும் அடிக்கடி மோதி விபத்துக்குள்ளாகி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த சாலையின் வளைவு பகுதியை இரண்டாக பிரித்து விட வேண்டும் என்றும், சாலையின் வளைவு பகுதியின் இரு பகுதிகளிலும் அபாய வளைவுகள் மெதுவாக செல்லவும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு பலகை வைக்கவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரையிலும் எந்தவிதமான பலனும் இல்லை. ஆனால் விபத்துகள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே போலீசார் சாலையின் இருபுறமும் தடுப்பு அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அபாய வளைவு மெதுவாக செல்லவும் என்று அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story