கொடிவேரி அணையில் தடையை மீறி குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி சாவு; செல்பி எடுக்க முயன்றபோது விபரீதம்


கொடிவேரி அணையில் தடையை மீறி குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி சாவு; செல்பி எடுக்க முயன்றபோது விபரீதம்
x
தினத்தந்தி 6 Dec 2021 2:17 AM IST (Updated: 6 Dec 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

கொடிவேரி அணையில் தடையை மீறி குளிக்க சென்ற வாலிபர் செல்பி எடுக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

டி.என்.பாளையம்
கொடிவேரி அணையில் தடையை மீறி குளிக்க சென்ற வாலிபர் செல்பி எடுக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இதுபற்றி போலீசில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவன விற்பனையாளர்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் ரகு (வயது 21). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். 
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரகு தனது பெண் தோழிகள் 2 பேருடன் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்து உள்ளார். 
தடையை மீறி...
பவானி ஆற்றில் தற்போது அதிக அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிபோல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணை பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை என்பதை அறிந்ததும், அணையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள கொடிவேரி பாலத்தின் கீழ் பகுதியில் தடையை மீறி குளிப்பதற்காக ஆற்றில் ரகு இறங்கி உள்ளார். 
ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்
அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று கழுத்தளவு தண்ணீரில் நின்றபடி ரகு மிகவும் சந்தோஷமாக செல்பி எடுத்ததாக கூறப்படுகிறது. உற்சாக மிகுதியால் அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். 
இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதை கண்டதும் அவருடன் வந்த 2 பெண் தோழியர்களும் காப்பாற்றும் படி சத்தம்போட்டு கத்தினர். 
சாவு
இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதைத்தொடா்ந்து தீயணைப்பு வீரர்கள் பவானி ஆற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி ரகுவின் உடலை மீட்டனர். பின்னர் ரகுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story