சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடகம் முழுவதும் அம்ருத் திட்டம் விஸ்தரிப்பு - பசவராஜ் பொம்மை தகவல்


சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடகம் முழுவதும் அம்ருத் திட்டம் விஸ்தரிப்பு - பசவராஜ் பொம்மை தகவல்
x
தினத்தந்தி 6 Dec 2021 2:20 AM IST (Updated: 6 Dec 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடகம் முழுவதும் அம்ருத் திட்டம் விஸ்தரிக்கப்படும் என்றும், இதன்மூலம் சாலைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

தக்க பாடம் புகட்ட வேண்டும்

  பெங்களூரு ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளியல் ‘‘விஜய சங்கல்ப’’ மேல்-சபை தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

  பணம் இருக்கும் நபரை தேர்தலில் நிற்க வைத்து, பணம் செலவு செய்து அத்துடன் கட்சிக்கும் பணம் பெற்று ஏதாவது ஒரு வழியை பின்பற்றி வெற்றி பெற வேண்டும் என்பது காங்கிரசின் எண்ணம். இது காங்கிரசின் மிக மோசமான அரசியலை காட்டுகிறது. காங்கிரசின் தார்மிக எண்ணம் தரம் தாழ்ந்து போய்விட்டது. தவறான வழியில் பணம் செலவு செய்து வெற்றி பெற முயற்சி செய்யும் காங்கிரசுக்கு மேல்-சபை தேர்தலில் வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

நிதி ஒதுக்கீடு செய்யவில்லை

  சித்தராமையா, பா.ஜனதா பண பலம், அதிகார பலத்தை கொண்டு வெற்றி பெறுவதாக எப்போதும் சொல்வது உண்டு. ஆனால் இந்த வேலையை செய்வது காங்கிரஸ் தான். பணத்தை வாரி இறைக்கும் காங்கிரசுக்கு பா.ஜனதாவை குறை சொல்ல தார்மிக உரிமை இல்லை. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது கிராம பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

  கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் 4 லட்சம் வீடுகளும், பெங்களூருவில் ஒரு லட்சம் வீடுகளும் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வீடுகளின் கட்டுமான பணிகளை 1½ ஆண்டில் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவை முழுமையாக மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. பெங்களூருவை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்துகள் மேம்பாடு அடைந்தால் மட்டுமே பெங்களூரு முழுமையாக வளர்ச்சி அடைய முடியும். அதனால் பெங்களூருவை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

சுதந்திர தின பவள விழா

  பொருளாதார வளர்ச்சியால் அரசுக்கு கிடைக்கும் வருவாயில் இருந்து கிராம பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்கும் நிதி ஒதுக்கப்படும். 75-வது ஆண்டு சுதந்திர தின பவள விழாவையொட்டி அம்ருத் திட்டங்களை அறிவித்தோம். அதன்படி 750 கிராம பஞ்சாயத்துகளில் குடிநீர், உள்கட்டமைப்பு வசதிகள், சாலைகள், தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். இந்த திட்டத்தில் கூடுதலாக தலா ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. அதாவது கூடுதலாக 750 கிராம பஞ்சாயத்துகளுக்கும் சேர்த்து ரூ.187½ கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

  இந்த திட்டத்தை அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் விஸ்திரிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் இதுபற்றி முடிவு எடுத்து அறிக்கப்படும். கிராமங்களை மேம்படுத்துவது தான் அரசின் இலக்கு. ஆனேக்கல் தொகுதியில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கு அதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. அதனால் இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

  இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், மத்திய இணை மந்திரி நாராயணசாமி, தேஜஸ்வி சூர்யா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சதீஸ்ரெட்டி, கிருஷ்ணப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story