அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் 11-ந் தேதி சேலம் வருகை-அமைச்சர் கே.என்.நேரு தகவல்
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வருகிற 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சேலம்:
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வருகிற 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
செயற்குழு கூட்டம்
சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே நாளில் தேர்தல்
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே நாளில் நடக்கும். தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 31 பேரூராட்சிகள், 6 நகராட்சிகள், ஒரு மாநகராட்சி உள்ளது.
அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷ்டி பூசல் இல்லாமல் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். அப்போது தான் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும்.
பதவிகள் தேடி வரும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவித்தால் அவர் வெற்றி பெறுவார் என்று கருதி அவரை தேர்வு செய்ய வேண்டும். மற்றவர்கள் நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பொறாமைபடக்கூடாது. கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு பதவிகள் நிச்சயம் தேடி வரும்.
சேலம் மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. பொய்யான வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். இதை நம்பி பா.ம.க. அவர்களுடன் கூட்டணிக்கு சென்றது. ஆனால் தற்போது இடஒதுக்கீட்டிற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. அரசு முறையிட்டு இடஒதுக்கீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மு.க.ஸ்டாலின் வருகை
சேலத்திற்கு வருகிற 11-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நான் நேரடியாக சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றேன். அதாவது 46 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெற்றப்பட்டுள்ளன. அதில், சுமார் 26 ஆயிரம் பேருக்கு சேலத்தில் 11-ந் தேதி நடக்கும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
சேலத்தில் அன்றைய தினம் நடக்கும் விழா தமிழகத்திற்கே முன்மாதிரியாக அமைய வேண்டும். கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து நிகழ்ச்சி நடக்கும் திடல் வரை கட்சியினர் திரண்டு முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
இந்த கூட்டத்தில், மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் கோபால், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நாசர்கான், மாநகர செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் டாக்டர் தருண், மாநகர துணை செயலாளர் கணேசன், வக்கீல் அண்ணாமலை உள்பட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story