பெங்களூருவில் தமிழக வாலிபர் படுகொலை - காதலியின் தந்தை கைது


பெங்களூருவில் தமிழக வாலிபர் படுகொலை - காதலியின் தந்தை கைது
x
தினத்தந்தி 6 Dec 2021 2:39 AM IST (Updated: 6 Dec 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தமிழக வாலிபர் உருட்டு கட்டையால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் காதலித்த இளம்பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

தமிழக வாலிபா் மாயம்

  பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வினோபாநகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். லோகநாதனின் சகோதரர் மகன் நிவேஷ்குமார்(வயது 19). இவர், தனது பெரியப்பா வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம்(நவம்பர்) 13-ந் தேதி தமிழ்நாட்டில் வசித்து வந்த உறவினர் ஒருவர் இறந்து விட்டதால், லோகநாதன் தனது குடும்பத்துடன், அங்கு புறப்பட்டு சென்றிருந்தார். இதனால் நிவேஷ்குமார் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

  கடந்த மாதம் 29-ந் தேதி தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு லோகநாதன் திரும்பி வந்திருந்தார். அப்போது தனது சகோதரர் மகன் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தாா். எங்கு தேடியும் நிவேஷ்குமார் கிடைக்காததால், வி.வி.புரம் போலீஸ் நிலையத்தில் நிவேஷ்குமார் காணாமல் போய் விட்டதாக கூறி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவேஷ்குமாரை தேடிவந்தனர்.

உடல் அடையாளம் காணப்பட்டது

  மேலும் நிவேஷ்குமாரை காணவில்லை என்று கூறி, அவரது புகைப்படத்தை நகரில் உள்ள அனைத்து போலீஸ் நியைங்களுக்கும், போலீசார் அனுப்பி வைத்திருந்தனர். அப்போது விக்டோரியா ஆஸ்பத்திரியில் ஒரு வாலிபரின் உடல் இருப்பதாகவும், அது காணாமல் போனதாக தேடப்படும் நிவேஷ்குமாராக இருக்கலாம் என்ற சந்தேகமும் கலாசி பாளையம் போலீசாருக்கு எழுந்தது.

  இதுபற்றி வி.வி.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அந்த வாலிபரின் உடல் காணாமல் போனதாக தேடப்பட்ட நிவேஷ்குமார் என்று அடையாளம் காணப்பட்டது. அதே நேரத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி நிவேஷ்குமார், அனாதையாக ரோட்டில் கிடந்ததாக கூறி ஒருவர் விக்டோரியா ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.

காதலியின் தந்தை கைது

  அத்துடன் நிவேஷ்குமாரின் தலையில் பலமான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்திருப்பதும், அவர் கீழே விழுந்து உயிர் இழக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, வி.வி.புரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில், நிவேஷ்குமாரை கொலை செய்ததாக, அவரது காதலியின் தந்தையான நாராயண்(46) என்பவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

  அதாவது கைதான நாராயணும், வினோபாநகரில் வசித்து வருகிறார். அவர் ஆட்டோ டிரைவர் ஆவார். அவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். அதே பகுதியில் பெரியப்பாவின் வீட்டில் வசித்து வந்த நிவேஷ்குமாருக்கும், நாராயணின் மகளுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

உருட்டு கட்டையால் தாக்கி...

  கடந்த மாதம் 28-ந் தேதி நாராயண் வேலைக்கு சென்றதும், அவரது வீட்டுக்கு நிவேஷ்குமார் சென்றுள்ளார். அங்கு தனது காதலியுடன் அமர்ந்து நிவேஷ்குமார் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் நாராயண் வீட்டுக்கு வந்துள்ளார். தனது மகளுடன் நிவேஷ்குமார் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், சண்டை போட்டுள்ளார். பின்னர் வீட்டில் கிடந்த உருட்டு கட்டையால் நிவேஷ்குமாரின் தலையில் நாராயண் பலமாக தாக்கியுள்ளார்.

  இதில், பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய நிவேஷ்குமாரை, விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனாதை வாலிபர் என்று கூறி நாராயண் அனுமதித்து விட்டு தப்பி ஓடிஇருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நிவேஷ்குமார் பலியானது தெரியவந்துள்ளது. கைதான நாராயண் மீது வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story