‘விவசாய கடனை தள்ளுபடி செய்தது மோடி’ - சித்தராமையா வாய் தவறி பாராட்டியதால் பரபரப்பு
விவசாய கடனை தள்ளுபடி செய்தவர் மோடி என்று சித்தராமையா வாய் தவறி பேசி பாராட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை
கர்நாடக மேல்-சபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று பெலகாவியில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசும்போது, மத்தியில் பிரதமர் மோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார் என்று வாய் தவறி கூறி பாராட்டினார். தனது தவறை உடனே அறிந்து கொண்ட அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறினார். இது சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-
பா.ஜனதா இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததால், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. போராட்டம் நடத்திய விவசாயிகளில் 700 பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை. நான் ஆட்சியில் இருந்தபோது இந்திரா உணவகம் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தேன். இதை இந்த பா.ஜனதா அரசு நிறுத்திவிட்டது.
குலுக்கல் மூலம் வந்துள்ளார்
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசுக்கு மக்கள் சாபம் விடுகிறார்கள். 2023-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. ஆட்சி மாற்றத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். தேசபக்தி பற்றி பா.ஜனதாவினர் பாடம் நடத்துகிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக பா.ஜனதாவினர் ஒருவராவது உயிர்த்தியாகம் செய்துள்ளார்களா?.
மகாத்மா காந்தியை கொன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான். பசவராஜ் பொம்மை ஆர்.எஸ்.எஸ். மூலம் முதல்-மந்திரி பதவிக்கு வந்தவர் அல்ல. அவர் குலுக்கல் மூலம் பதவிக்கு வந்துள்ளார். அவரை நீக்குவதாக மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story