நெல்லையில் இடி, மின்னலுடன் பலத்த மழை தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது
நெல்லையில் இடி, மின்னலுடன் பலத்த மழை
நெல்லை:
நெல்லையில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது.
பலத்த மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. கடந்த 4 நாட்களாக வறண்ட வானிலை நிலவியதுடன், வெயிலும் அடித்தது. இதனால் மக்கள் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நெல்லையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணி அளவில் திடீரென்று வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ¾ மணி நேரம் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது.
தண்ணீர் தேங்கியது
மேலும் நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, டவுன், பேட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. டவுன் தொண்டர் சன்னதி, வழுக்கோடை, பேட்டையில் ரோடுகளில் வாகன ஓட்டிகள் பள்ளம், மேடு தெரியாமல் சிரமப்பட்டு பயணம் செய்தனர்.
இந்த மழையால் நெல்லை மாநகரில் பாதுகாப்பு கருதி பல்வேறு இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. மழை குறைந்த உடன், மின் பாதையை ஆய்வு செய்து மீண்டும் மின்வினியோகம் செய்யப்பட்டது.
இதேபோல் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்ேத வெயில் அடித்தது. மாலையில் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
அணைகள் நிலவரம்
பாபநாசம் அணையில் நீர்வரத்தைவிட கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 136.20 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,412 கன அடியாகவும், வெளியேற்றம் 2,705 கன அடியாகவும் உள்ளது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டமும் குறைந்து 137.20 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 116.15 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 854 கனஅடியாக உள்ளது. பாசனத்துக்காக தலை வாய்க்காலில் 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. வடக்கு பச்சையாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. நம்பியாறு அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் 1,500 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. கொடுமுடியாறு அணையும் நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் 100 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் நிரம்பி விட்டன. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
சேர்வலாறு -1, நம்பியாறு -84, ராதாபுரம் -27, நாங்குநேரி -55, சிவகிரி -6.
Related Tags :
Next Story