பாசன உதவியாளரை அரிவாளை காட்டி மிரட்டியதாக கணவன், மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு


பாசன உதவியாளரை அரிவாளை காட்டி மிரட்டியதாக கணவன், மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Dec 2021 9:55 PM GMT (Updated: 2021-12-06T03:25:48+05:30)

கணவன், மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு

இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் பெரியகுளத்தில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் படப்பார்குளம் பகுதியில் பட்டஞ்சேரி குளத்துக்கு பிரிந்து விஜயஅச்சம்பாடு, இட்டமொழி குளங்கள் வழியாக திசையன்விளை சுற்று வட்டார பகுதி குளங்களுக்கு செல்கிறது. இந்நிலையில் படப்பார்குளத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் காமாட்சி (வயது 47) என்பவர் பட்டஞ்சேரி குளத்துக்கு தண்ணீர் வரும் கால்வாய் வழியாக அவரது வயல்களில் சேதம் ஏற்படுவதாக கூறி தண்ணீரை கருமேனி ஆற்றில் திருப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவத்தன்று ஆற்றில் செல்லும் தண்ணீரை பொக்லைன் எந்திரங்கள் மூலம் அடைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த காமாட்சி, அவரது மனைவி பத்மா (45) உள்ளிட்ட 4 பேர் பொக்லைன் எந்திரம் மீது கற்களை வீசி எறிந்து கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பாசன உதவியாளர் போவாஸ் (வயது 45) என்பவரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போவாஸ் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

Next Story