ஆவுடையானூர் பத்மநாதபேரி குளத்துக்கு புதிய வாய்க்கால் அமைத்து தண்ணீர் வந்தது பழனி நாடார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்


ஆவுடையானூர் பத்மநாதபேரி குளத்துக்கு புதிய வாய்க்கால் அமைத்து தண்ணீர் வந்தது பழனி நாடார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்
x
தினத்தந்தி 6 Dec 2021 3:52 AM IST (Updated: 6 Dec 2021 3:52 AM IST)
t-max-icont-min-icon

பத்மநாதபேரி குளத்துக்கு புதிய வாய்க்கால் அமைத்து தண்ணீர் வந்தது

பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் யூனியனில் உள்ள பெரும்பாலான குளங்கள் தற்போது பெய்த மழையால் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் ஆவுடையானூர் பத்மநாதபேரி குளத்திற்கு தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. கொண்டலூர் வெள்ளாள புதுகுளம் நிரம்பி, மறுகால் விழுந்தால் மட்டுமே இந்த குளத்திற்கு தண்ணீர் வரும். அந்த குளம் தற்போது பாதியளவு மட்டுமே நிரம்பியுள்ளது.
இந்த நிலையில் ஆவுடையானூர் குளத்துக்கு கைக்கொண்டார்குளம் மறுகாலில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த குளம் பெருகி தற்போது உபரி நீர் வெளியேறியது. இந்த தண்ணீரை பத்மநாதபேரி குளத்திற்கு கொண்டு வரும் வகையில் உபரி நீர் செல்லும் ஓடை அருகில் இருந்த தனியார் நில உரிமையாளர்கள் மற்றும் சிற்றாறு வடிநில அலுவலர்களிடமும் பஞ்சாயத்து தலைவர் குத்தாலிங்கராஜா ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்று தனியார் நிலங்கள் வழியாக பொக்லைன் எந்திரம் மூலம் புதிதாக வாய்க்கால் அமைத்து தண்ணீர் கொண்டு வந்து தற்போது குளம் பெருகி வருகிறது. இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த பஞ்சாயத்து தலைவர் குத்தாலிங்கராஜா மற்றும் சிற்றாறு வடிநில அதிகாரிகளையும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களை எஸ்.பழனி நாடார் எம்.எல்.ஏ., சிற்றாறு வடிநில உதவி பொறியாளர் தங்க ஜெய்லானி ஆகியோர் பார்வையிட்டனர். இந்த குளம் நிரம்பும் பட்சத்தில் சுமார் 150 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் என்று சிற்றாறு வடிநில உதவி பொறியாளர் தெரிவித்தார்.

Next Story