விளாத்திகுளம் அருகே இயற்கை முறையில் காய்கறி தோட்டத்தை உருவாக்கி அரசு பள்ளி மாணவர்கள் அசத்தி உள்ளனர்
விளாத்திகுளம் அருகே இயற்கை முறையில் காய்கறி தோட்டத்தை உருவாக்கி அரசு பள்ளி மாணவர்கள் அசத்தி உள்ளனர்
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே இயற்கை முறையில் காய்கறி தோட்டத்தை உருவாக்கி அரசு பள்ளி மாணவர்கள் அசத்தி உள்ளனர்.
காய்கறி தோட்டம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புகளுக்கான வேளாண்மைத்துறை ஆசிரியராக பணிபுரிபவர் காளிராஜன்.
இவர் தன்னிடம் பயிலும் மாணவ-மாணவிகளை வெறும் தேர்வு மதிப்பெண்களுக்காக மட்டும் தயார்படுத்தாமல், அவர்களை இளம் ஆராய்ச்சியாளர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், இயற்கை வாழ்வியலை கற்பிக்கும் விதமாகவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், முற்றிலும் இயற்கையான முறையில் தக்காளி, பாகற்காய், அவரை, புடலங்காய், மிளகாய், வெண்டைக்காய் உள்ளிட்ட 40 வகையான தாவரங்களை கொண்டுள்ள பள்ளித்தோட்டத்தை உருவாக்க செய்து வெற்றி கண்டுள்ளார்.
இயற்கை உரங்கள்
அதன்படி, ஆசிரியரின் ஆலோசனையை பெற்று வகுப்பில் உள்ள 40 மாணவர்களும் தனித்தனியாக வெவ்வேறு வகையான தாவரங்களை முற்றிலும் இயற்கை விவசாய முறையில், விதை விதைத்தல் முதல் அது முளைத்து வளர்ந்து பூ பூத்து காயாகி கனியாக உருவாகும் நிலை வரை ஒரு தாவரத்தின் அனைத்து படிநிலைகளையும் பதிவு செய்து அறிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர். கல்லூரியின் முதுநிலை மாணவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சியை பள்ளியிலேயே செய்து அசத்தியுள்ளனர்.
மேலும் இயற்கை விவசாய முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தங்களது தாவரங்களுக்கு தாங்களே தயார் செய்த இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்டவற்றை மட்டுமே பயன்படுத்தி வளர செய்து சுத்தமான ஆர்கானிக் காய்கறிகளை பெற்றுள்ளனர்.
மாணவர்கள் வேண்டுகோள்
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-
தற்போது இயற்கை விவசாய முறை படிப்படியாக அழிந்து வரும் நிலையில், அதனை காப்பாற்றுவதற்காகவே நாங்கள் வேளாண்மை ஆசிரியரின் துணையோடு, இயற்கை விவசாய முறையை கையில் எடுத்ததோடு மட்டுமில்லாமல், அதனோடு தற்போதைய நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளோம். எங்கள் தாவரங்களுக்கு தேவையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு என நாங்கள் கடைகளை நாடாமல் இயற்கையான முறையில் நாங்களே தயார் செய்கிறோம். அவற்றை மட்டுமே தாவரங்களுக்கு அளித்து தற்போது முற்றிலும் ஆர்கானிக் முறையில் பல வகையான காய்கறிகளை உற்பத்தி செய்துள்ளோம்.
எனவே அழிந்து வரும் இயற்கை விவசாய முறையை காப்பாற்ற விவசாயிகள் அனைவரும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து அதற்கு பதிலாக இயற்கையானவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story