1 கோடி டோஸ் முத்தடுப்பு ஊசி வினியோகிக்க நடவடிக்கை


1 கோடி டோஸ் முத்தடுப்பு ஊசி வினியோகிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2021 8:24 PM IST (Updated: 7 Dec 2021 3:38 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு 1 கோடி டோஸ் முத்தடுப்பு ஊசி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் சிவக்குமார் தெரிவித்தார்.

ஊட்டி

மத்திய அரசுக்கு 2023-ம் ஆண்டுக்குள் 1 கோடி டோஸ் முத்தடுப்பு ஊசி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட் இயக்குனர் டாக்டர் சிவக்குமார் தெரிவித்தார்.

முத்தடுப்பு ஊசிகள்

மத்திய சுகாதார அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் நீலகிரி மாவட்டம் குன்னூரில் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது கடந்த 1907-ம் ஆண்டு வெறிநாய் கடி தடுப்பூசி உற்பத்திக்காக தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெறிநாய் கடி தடுப்பூசி உற்பத்தி நிறுத்தப்பட்டது. 

தற்போது தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமல் ஆகிய வகை நோய்களை தடுப்பதற்காக முத்தடுப்பு ஊசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முத்தடுப்பு ஊசிகளை சோதனை முறையில் உற்பத்தி செய்து, மத்திய அரசுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மருந்துகளை நிரப்பும் வசதி

இதுகுறித்து நிறுவன இயக்குனர் டாக்டர் சிவக்குமார் கூறியதாவது:- பாஸ்டியர் இன்ஸ்டிடியூட்டில் ரூ.137 கோடி செலவில் 7 புதிய மற்றும் 2 மாற்றி அமைக்கப்பட்ட உற்பத்தி வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விலங்கு வளர்ப்பு, விலங்கு சோதனை வசதிகள் மற்றும் கிடங்குக்காக பிரத்யேக ஆய்வகம் இருக்கிறது. இங்கு ஒரு மாதத்துக்கு, 1 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை குப்பிகளில் நிரப்பும் திறன் உள்ளது. ஆண்டுக்கு 10 கோடி தடுப்பூசி மருந்துகளை நிரப்ப முடியும். 

இது மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. தற்போது இந்தியாவில் சீரம், பாரத் ஆகிய 2 நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி அதிகமாக உள்ளது. ஒருவேளை தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டால் குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. 

கோவையில் ஆய்வகம்

இது தவிர முத்தடுப்பு ஊசிகள் சோதனை முறையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து தரமுடன் உள்ளதா? என்று சோதனை செய்யப்படும். வருகிற 2023-ம் ஆண்டுக்குள் 1 கோடி டோஸ் முத்தடுப்பு ஊசி அரசுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

புதிய ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் கண், உடல் வலி, சளி போன்றவை ஏற்படுகிறது. இருப்பினும் அதன் பாதிப்புகள் தெரிய 4 முதல் 8 வாரங்கள் ஆகும். கோவை பிரஸ் காலனியில் வெறிநாய் கடி தடுப்பூசி தயாரிப்பதற்கு ஆய்வகம் அமைக்க 30 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story