தனபால், ரமேசுக்கு மேலும் 2 வாரம் காவல் நீட்டிப்பு


தனபால், ரமேசுக்கு மேலும் 2 வாரம் காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2021 8:24 PM IST (Updated: 6 Dec 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான தனபால், ரமேசுக்கு மேலும் 2 வாரம் காவலை நீட்டித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான தனபால், ரமேசுக்கு மேலும் 2 வாரம் காவலை நீட்டித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

இந்த வழக்கு குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி போலீசார் கைது செய்தனர். 

அவர்களை தனித்தனியாக சோலூர்மட்டம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து முக்கிய தகவல்களை திரட்டினர். இதற்கிடையே தனபால் உள்பட 2 பேருக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஊட்டி கோர்ட்டில் ஏற்கனவே 2 முறை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

காவல் நீட்டிப்பு

இந்த நிலையில் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் நேற்று தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரை கூடலூர் கிளை சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 

பின்னர் அவர்களுக்கு மேலும் 2 வாரத்துக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து வருகிற 20-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து தனபால், ரமேஷை போலீசார் கூடலூர் கிளை சிறைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.


Next Story