தனியார் விடுதி ஊழியர் கொலை
ஊட்டியில் தனியார் விடுதி ஊழியர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சமையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி
ஊட்டியில் தனியார் விடுதி ஊழியர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சமையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
விடுதி வரவேற்பாளர்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள விவேகானந்தா நகரை சேர்ந்தவர் சிவா(வயது 28). படகு இல்லம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். அதே விடுதியில் பரத்(26) என்பவர் கேன்டீன் வைத்து சமையல் தொழிலாளியாக பணிபுரிந்தார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த தனியார் விடுதியில் சில சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தனர்.
அப்போது அவர்களுக்கு உணவு வினியோகம் செய்ய ஆர்டர் எடுப்பதில் சிவா, பரத் ஆகியோருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது பரத்தின் தாயாரை தகாத வார்த்தைகளால் சிவா பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் தடுத்து சமாதானம் செய்து வைத்தனர்.
குத்திக்கொலை
இந்த நிலையில் நேற்று மாலை பரத் தனது தாயாரை மொபட்டில் ஏற்றிக்கொண்டு அந்த தனியார் விடுதி முன்பு வந்தார். அப்போது மீண்டும் சிவா தகாத வார்த்தைகளால் பரத்தை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பரத் தனது மொபட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கைது
பின்னர் சிவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. மேலும் ஊட்டி நகர மேற்கு போலீசார் பரத் மீது கொலை வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி முன்பு கொலை நடந்த சம்பவம் ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story