மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் 20-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடிப்படை வசதிகள்
திருப்பூர் மாநகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது.
இந்த நிலையில் 20-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார் தலைமையில் அ.தி.மு.க. அம்மா பேரவை மாநகர் மாவட்ட துணை செயலாளர் நீதிராஜன், கோவை, திருப்பூர் மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளன தலைவர் ஜெகநாதன், முன்னாள் கவுன்சிலர் ரங்கசாமி உள்பட அதி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை போயம்பாளையம் நஞ்சப்பாநகரில் உள்ள 2-வது மண்டல அலுவலகம் முன்பு திரண்டனர்.
முற்றுகை போராட்டம்
பின்னர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதன் பின்பு அனைவரும் உதவி கமிஷனர் கண்ணனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், 20-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆட்சியில் வாரம் 2 முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குருவாயூரப்பன்நகர், அவினாசிநகர், சக்திநகர், ஏ.டி.காலனி உள்பட வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் காணப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளில் அவினாசிநகர், நஞ்சப்பாநகர், ஏ.டி.காலனி உள்ளிட்ட பகுதிகள் விடுபட்டுள்ளன என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
வாக்குவாதம்
அப்போது இதுதொடர்பாக பொதுமக்கள் முறையிட்டும் எந்த பயனில்லை என்று கூறியும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மனுவை பெற்றுக்கொண்ட உதவி கமிஷனர் கண்ணன் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக மண்டல அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story