ரூ.25ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும்களவுமாக பிடித்து கைது
ரூ25ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும்களவுமாக பிடித்து கைது
பொங்கலூர்,
பொங்கலூரில் கிராவல் மண் ஓட்ட லாரி உரிமையாளரிடம் ரூ.25ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது பற்றி போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வருவாய் ஆய்வாளர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) திருப்பூர் அருகே உள்ள பொங்கலூரில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பல்வேறு புகார்கள் சென்றன. இந்த நிலையில் நேற்று அலகுமலையைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் முருகேசன் (40) லாரிகள் மூலம் கிராவல் மண் எடுத்துச்செல்ல அனுமதி கேட்டுள்ளார்.
ரூ.25 ஆயிரம் லஞ்சம்
அதற்கு வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ரூ.25 ஆயிரம் கொடுத்தால் கிராவல் மண் எடுக்க அனுமதிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத முருகேசன் திருப்பூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்தார்.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான போலீசார் முருகேசனிடம் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர்.
நேற்று அலுவலகத்தில் இருந்த வருவாய் ஆய்வாளர் செந்தில் குமாரிடம் முருகேசன் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதனை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாரை பிடித்தனர்.
கைது
இதனை தொடர்ந்து அவரிடம் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. மேலும் அவரது அலுவலக மேஜை டிராயரில் கணக்கில் வராத ரூ.45 ஆயிரம் இருந்தது. அதனையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து பல்லடம் தாசில்தார் தேவராஜிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் செந்தில் குமாரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் பொங்கலூர் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story