குடியிருப்புகளுக்கு மத்தியில் இயங்கி வந்த 2 டாஸ்மாக் கடைகள் மூடல்
விழுப்புரம் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் இயங்கி வந்த 2 டாஸ்மாக் கடைகளை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மூடுவதற்கு கலெக்டர் மோகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரில் அரசு மருத்துவமனை எதிரே ஒரு டாஸ்மாக் கடையும், பழைய பஸ் நிலையம் எதிரே ஒரு டாஸ்மாக் கடையும் இயங்கி வந்தன. நகரின் மையப்பகுதியில் இந்த கடைகள் அமைந்துள்ளதோடு மட்டுமன்றி குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மத்தியிலும் இந்த டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்ததால் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது.
இதையடுத்து இந்த 2 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டருக்கும் பல்வேறு புகார்கள் சென்றன.
மூடப்பட்டன
இதனடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த 2 டாஸ்மாக் கடைகளையும் மூடுமாறு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு கலெக்டர் டி.மோகன் உத்தர விட்டார். இதையடுத்து அந்த 2 டாஸ்மாக் கடைகளும் நேற்று மூடப்பட்டன.
இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முருகன் கூறுகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கலெக்டரின் அறிவுரைப்படி விழுப்புரம் நகரில் இயங்கி வந்த 2 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் (அதாவது நேற்று) மூடப்பட்டுள்ளன. அந்த 2 கடைகளுக்கும் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் இந்த கடைகள் அங்கு செயல்படும் என்றார்.
Related Tags :
Next Story