ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 3-வது சோமவார விழா
அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 3-வது சோமவார விழா நடந்தது. இதையொட்டி மலையடிவாரத்தில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
குளித்தலை
ரெத்தினகிரீஸ்வரர் கோவில்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவார விழா நடைபெறுவது வழக்கம். 5 திங்கட்கிழமைகளிலும் 5 சோமவாரவிழா நடைபெறும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மக்கள் விரதம் இருப்பதுபோல, இந்த சோமவார தினத்தன்று சிவபெருமானை வேண்டி விரதம் இருந்து மலையேறி அவரை தரிசனம் செய்துவந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன்காரணமாக இங்கு நடைபெறும் 5 சோமவார தினத்தன்றும் பல்வேறு ஊர்களில் மட்டுமல்லாமல், பல மாவட்டங்களில் வசிக்கும் இக்கோவில் குடிபாட்டுகாரர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இங்குவந்து மலைமேல் வீற்றிருக்கும் ரெத்தினகிரீசுவரரை வழிபட்டு செல்வார்கள்.
3-வது சோமவார விழா
அதுபோல இந்த ஆண்டு இக்கோவிலில் முதல் சோமவாரம் கடந்த நவம்பர் மாதம் 22-ந்தேதி தொடங்கியது. இந்தநிலையில் 3-வது சோமவார விழாவான நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குளித்தலை பகுதியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்திருந்தனர்.
தேங்காய் உடைத்து...
அவர்கள் தங்களின் விரதத்தை முடிப்பதற்காக 1017 படிகள் கொண்ட இக்கோவிலின் மலை அடிவாரத்தில் உள்ள பாறைகளில் தாங்கள் கொண்டுவந்த பூ, வாழைப்பழங்கள், மாவிளக்கு உள்பட பல பொருட்களை வைத்தும் தேங்காய் உடைத்தும் சாமியை வழிபட்டனர். பலர் தங்களது விளைநிலங்களில் பயிரிட்டு அறுவடை செய்த நெல், கடலை, மிளகாய், கம்பு உள்பட பல பொருட்களை கொண்டுவந்து கோவில் படிக்கட்டுகள், மலையைச்சுற்றி கொட்டி வழிபட்டனர். மேலும் நேற்று இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்த காரணத்தால், குளித்தலை போலீசார் மற்றும் ஊர்க்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story