ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கைது செய்ய சென்ற போலீசார் மீது தாக்குதல். கைவிலங்கை வெல்டிங் மூலம் துண்டித்து விடுவித்தனர்
திருட்டு வழக்குதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கைதுசெய்ய சென்ற போலீசாரை பொதுமக்கள் தாக்கினர். அத்துடன் கைவிலங்கை வெல்டிங் மூலம் துண்டித்து விடுவித்தனர்.
ஆம்பூர்
திருட்டு வழக்குதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கைதுசெய்ய சென்ற போலீசாரை பொதுமக்கள் தாக்கினர். அத்துடன் கைவிலங்கை வெல்டிங் மூலம் துண்டித்து விடுவித்தனர்.
ஆம்பூர் அருகே நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
போலீசார் மீது தாக்குதல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுவிதா. இவரது கணவர் கணேசன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆம்பூர் துத்திப்பட்டு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு சாதாரண உடையில் காரில் வந்த கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதி குற்றப்பிரிவு போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக கணேசனை கைவிலங்கிட்டு காரில் வலுக்கட்டாயமாக ஏற்ற முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உள்ளூர் போலீசார் துணையுடன் வந்து அழைத்து செல்லுங்கள் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் கோயம்புத்தூர் குற்றப்பிரிவு போலீசார் ஞானப்பிரகாசம், ராஜா முஹம்மது மற்றும் வடிவேல் உள்ளிட்ட 5 போலீசாரை பொதுமக்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
கைவிலங்கை துண்டித்தனர்
மேலும் ராஜாமுஹம்மது என்பவரது கையிலும் கணேசன் கையிலும் மாட்டப்பட்டிருந்த கைவிலங்கை ஊர் மக்கள் உதவியுடன் வெல்டிங் எந்திரம் மூலமாக துண்டித்து அங்கிருந்து கணேசனை ஊர் மக்கள் அழைத்துச் சென்றுள்ளனர். தாக்குதலுக்குள்ளான குற்றப்பிரிவு போலீசார் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து உமராபாத் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் துத்திபட்டு பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story