ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பியது


ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிரம்பியது
x
தினத்தந்தி 6 Dec 2021 11:48 PM IST (Updated: 6 Dec 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் பெரியகண்மாய் நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் 250 கன அடி அளவில் தென்கலுங்கு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பெரியகண்மாய் நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் 250 கன அடி அளவில் தென்கலுங்கு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெரிய கண்மாய்

வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து இடது, வலது பிரதான கால்வாய்களுக்கும் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கும் பிரித்து விடப்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் சீறிப்பாய்ந்து ராமநாதபுரத்தை வந்தடைந்துள்ளது. சீராக வந்து கொண்டிருந்த தண்ணீர் திடீரென்று உயர்ந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமநாதபுரம் அருகே காவனூர், காருகுடி, தொருவளுர் உள்ளிட்ட பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. கிராமங்களை சூழ்ந்த வெள்ளநீர் வேகம் குறைந்துள்ள நிலையிலும் கிராமங்களில் தண்ணீர் இன்னும் தேங்கியபடியே உள்ளது.
காருகுடி கலுங்கு வழியாக கடலுக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் கடலுக்கு திறந்துவிடப்பட்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவில் 900 கனஅடி தண்ணீர் பெரியகண்மாய்க்கு திறந்துவிடப்பட்டது. இதன்மூலம் ராமநாதபுரம் பெரியகண்மாய் அதன் முழு கொள்ளளவான 7 அடியில் நேற்று காலை ஆறரை அடியை எட்டியது. இதனை தொடர்ந்து கண்மாயின் பாதுகாப்பு மற்றும் அருகில் உள்ள கிராமங்களின் நிலை, விவசாய நிலங்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெரிய கண்மாயில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது.

250 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தென்கலுங்கு வழியாக முதல்கட்டமாக 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் அருகில் உள்ள சக்கரக்கோட்டை கண்மாய்க்குள் விடப்பட்டுள்ளது. சக்கரக்கோட்டை கண்மாயும் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் கலுங்கு மடை வழியாக வெளியேறி தானாக கடலுக்கு சென்றுவிடும்.
வைகை ஆற்றுக்கு தற்போதைய நிலையில் 600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தண்ணீர் வரத்தை பொறுத்து பெரியகண்மாயில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு மாறுபடும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரியகண்மாயில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், சக்கரக்கோட்டை கண்மாய் நிறைந்து கடல்போல் காட்சி அளிப்பதாலும் 2 கண்மாய்களையும், அதன் கரைகளையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

பெரிய கண்மாய், சக்கரக்கோட்டை கண்மாயை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ஆர்.எஸ்.மடை ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாயம் குறித்து அறிவிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு பெருவெள்ளம் ஏற்பட்டு மழைநீரும் வைகை தண்ணீரும் தேக்க வழியின்றி காருகுடி வழியாகவும், பெரிய கண்மாய் வழியாகவும் கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story