மாவட்டத்தில் பரவலாக மழை ராமர் மட சுவர் இடிந்து விழுந்தது


மாவட்டத்தில் பரவலாக மழை  ராமர் மட சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 7 Dec 2021 12:07 AM IST (Updated: 7 Dec 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ராமர் மட சுவர் இடிந்து விழுந்தது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் வட கிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் கடைசி வாரம் முதல் பெய்து வருகிறது. கடந்த மாதத்தில் அதிக மழை பெய்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்யவில்லை. இந்தநிலையில் புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் பகலில் வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. இந்த மழையானது இடைவிடாமல் பரவலாக பெய்தது. காலை 8 மணி வரை மழை தூறியபடி இருந்தது. அதன்பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த பரவலான மழையினால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சுவர் இடிந்து விழுந்தது
மழையின் காரணமாக திருக்கோகர்ணத்தில் உள்ள ராமர் மடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இதில் உள்ளே யாரும் இல்லாததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த கட்டிடம் பழமையான கட்டிடமாகும். இந்த மடத்தில் அப்பகுதியில் உள்ளவர்கள் பஜனை பாடுவது, பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் பூஜையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் அருகே உள்ள குளம் நிரம்பி உபரிநீர் பெருக்கெடுத்து கால்வாயில் ஓடியது. மேலும் அந்த தண்ணீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து திருச்சி சாலையில் ஓடியது. இதேபோல அருகில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்தது.
 மேலும் அரசு உயர்நிலைப்பள்ளிக்குள் தண்ணீர் புகுந்து பாய்ந்தோடியது. இதனால் மாணவ-மாணவிகள் சிரமம் அடைந்தனர். அருங்காட்சியக வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்ததை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதேபோல மாவட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ஆவூர்
விராலிமலை ஒன்றியத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்த கனமழையால் ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் விராலிமலை, நீர்பழனி, ஆலங்குடி, ஆவூர், ஆலங்குளம், மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. பின்னர், காலை 6.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மீண்டும் மழைநீர் சூழ்ந்தது. மேலும் வயல்வெளிகளிலும், சாலையோரங்களிலும் மழைநீர் தேங்கியது.

Next Story