தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 Dec 2021 12:34 AM IST (Updated: 7 Dec 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

புகார் பெட்டி

பயணிகள் நிழற்கூடம் இடிப்பு

  வேலூர் காட்பாடி பகுதியில் மண்டபம் பஸ் நிறுத்தம் அருகில் காட்பாடி மற்றும் வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ் பயணிகளுக்காக இடது, வலது புறமாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நிழற்கூடங்கள் இருந்தன. ஒரு மளிகைக்கடைக்கு இடையூறாக இருப்பதாக 3 ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி மார்க்கமாக இருந்த பயணிகள் நிழற்கூடத்தை இடித்து விட்டனர். அதேபோல் வேலூர் மார்க்கமாக இருந்த நிழற்கூடத்தை தச்சு கூட்டுறவு சங்க கட்டிடத்துக்கு முன்பாக இருந்த காரணத்தால் அதையும் கடந்தசில நாட்களுக்கு முன்பு இடித்து விட்டார்கள். வேலூர், காட்பாடி மார்க்கமாக செல்லும் பஸ் பயணிகள், முதியோர், மாணவ மாணவிகள் மழை, வெயிலில் சிரமப்படுகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காட்பாடி, வேலூர் மார்க்கத்தில் மண்டபம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடங்களை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  -ஓ.ஜெ.கதிர்வேல். வேலூர்.

மாவட்ட தலைநகரத்தில் இருந்து பஸ் விட வேண்டும்

  ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா திமிரி ஒன்றியம் மேல்புதுப்பாக்கம், நியூ காலனி, ஆயர்பாடி வழியாக இதுவரை மாவட்ட தலைநகரத்தில் இருந்து ஒரு பஸ் வசதிகூட செய்து தரவில்லை. அங்கு வசிக்கும் மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், விவசாயம், ராணுவம், ஆசிரியர், வங்கி, மருத்துவமனை சார்ந்த பணிகளுக்காக மாவட்ட தலைநகரத்துக்கு செல்ல ஒரு பஸ் வசதி கூட மாவட்ட நிர்வாகம் செய்து தரப்படவில்லை. எங்கள் கிராமத்துக்கு ஆற்காடு, கலவை, மாம்பாக்கம், மேலபழந்தை, வாழைப்பந்தல், ஆயர்பாடி வழியாக மேல்புதுப்பாக்கம் வரை அரசு டவுன் பஸ் வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  -கமலக்கண்ணன், ஆயர்பாடி.
  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மகமதுபுரம் கிராமத்தில் 13டி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. ஆனால் எந்தக் காரணமும் இன்றி அந்த டவுன் பஸ் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் கிராம மக்கள், கல்வி நிலையங்களுக்கு செல்வோர், விளை பொருட்களை சந்தைக்கு எடுத்துச்செல்வோர் சிரமப்படுகிறார்கள். கிராம மக்கள் நலன் கருதி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.
  -கதிர்வேல், மகமதுபுரம்.

சாலை, கால்வாய் பணியை தொடங்குவார்களா?

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு அம்பேத்கர் நகருக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. சாலை மற்றும் கால்வாய் கட்டும் பணிக்காக கடந்த சிலநாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையர் பூமி பூஜை போட்டார். ஆனால் பணியை இன்னும் தொடங்காமல் வைத்துள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி சாலை, கால்வாய் பணியை விரைவில் தொடங்க ஏற்பாடு செய்வார்களா?
  -ப.துரை, ஆரணி.

சாலையை சீர் செய்வார்களா?

  திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி கடலாடி கிராமத்தில் பருவதமலை உள்ளது. கடலாடி களங்கல் அருகில் மலையடிவாரத்தில் மவுனயோகி விட்டோபானந்தா மடம் உள்ளது. பருவதமலைக்கு பவுர்ணமி, அமாவாசை, விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். கடந்தசில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலை மோசமாகி விட்டது. இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. விவசாயிகள், பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு கடலாடி, களங்கல் முதல் பருவதமலை ஆசிரமம் வரை சாலையை சீர் செய்வார்களா-?
  -ஜி.வி.ஜெயவேல், கடலாடி.

அடிப்படை வசதிகள் செய்து தருவார்களா?

  ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி வாசுகிநகரில் அடிப்படை வசதிகள் ஒன்று கூடஇல்லை. இரவில் தெரு மின்விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் தெருவில் விஷ உயிரினங்கள் நடமாட்டம் உள்ளது. தெரு மின்விளக்குகள் எரிய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.

வார்டுக்கு ஸ்ட்ரெச்சர் வண்டி வசதி தேவை

  திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்புமுறிவு தீவிர சிகிச்சை பிரிவில் வார்டு 407-ல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த வார்டு 4-வது தளத்தில் உள்ளது. அவர்களுக்கு சி.டி. ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே எடுப்பதற்கு தரைத்தளத்துக்கு கொண்டு சென்று எடுக்க வேண்டி உள்ளது. நோயாளிகள் அங்கு கொண்டு சென்று மீண்டும் வார்டுக்கு திரும்பி வர போதிய ஸ்ட்ரெச்சர் வண்டிகள் இல்லை. அங்குள்ள ஸ்ட்ரெச்சர் வண்டியின் சக்கரங்கள் உடைந்தும், கழன்றும் நோயாளிகளை விட மோசமான நிலையில் உள்ளது. எலும்பு முறிவு வார்டுக்கு முறையான ஸ்ட்ரெச்சர் வண்டி வசதியை மருத்துவ அதிகாரி ஏற்பாடு செய்வாரா?
  -டேவிட் அனோஜன், போளூர்.

தண்ணீர் வினியோகம் செய்யப்படுமா?

  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேரூராட்சி நேரு தெரு கடைசியில் ஒரு சிறுமின்விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியில் இருந்து 15 நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. மக்கள் சிரமப்படுகிறார்கள். பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குழாய்களை சீரமைத்து, தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுமா?
  -குமரன், போளூர்.

ஆபத்தான பயணம்

  திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. அங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அந்த வழியாக செல்லும் டவுன் பஸ்களில் ஏறி பயணம் செய்கிறார்கள். காலை, மாலை நேரத்தில் போதிய பஸ்வசதி இல்லாததால் மாணவர்கள் பஸ் படிகட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். காலை, மாலை கூடுதல் பஸ்களை பணிமனை மேலாளர் இயக்க வேண்டும்.
  -சுரேஷ், வந்தவாசி.
  
  

Next Story