மணமக்கள் வரவேற்பு முடிந்த நிலையில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என திருமணத்தை நிறுத்திய மணப்பெண்


மணமக்கள் வரவேற்பு முடிந்த நிலையில்  மாப்பிள்ளை பிடிக்கவில்லை என திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
x
தினத்தந்தி 6 Dec 2021 7:11 PM GMT (Updated: 6 Dec 2021 7:11 PM GMT)

பள்ளிகொண்டா அருகே மணமக்கள் வரவேற்பு முடிந்த நிலையில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறிய மணமகள் திருமணத்தை பாதியில் நிறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு
 
பள்ளிகொண்டா அருகே மணமக்கள் வரவேற்பு முடிந்த நிலையில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறிய மணமகள் திருமணத்தை பாதியில் நிறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவை அடுத்த குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஊசூரை அடுத்த தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருதரப்பு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பேசி முடிவு செய்தனர்.

அதன்படி திருமண ஏற்பாடு நடந்தது. பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் இரு குடும்பத்து உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 

பாதியில் நிறுத்தினார்

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மணப்பெண் தனது பெற்றோரிடமும், மணமகனின் பெற்றோரிடமும் தனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றும், அதனால் திருமணத்தை நிறுத்தும் படியும் கூறியதாக தெரிகிறது. இதைக்கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த இரு தரப்பு பெற்றோரும் செய்வதறியாமல் திகைத்தனர்.
 
அதேபோல் மணமகனும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இரு தரப்பு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மணப்பெண்ணை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக சமாதானம் செய்தும் மணப்பெண் ஏற்கவில்லை. இந்த திருமணத்தில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை, இனி என்னை கட்டாயப் படுத்தாதீர்கள் என்று உறுதியாக கூறினார். இதனால் வேறுவழியின்றி இருதரப்பினரும் சுமூகமாக பேசி திருமணத்தை நிறுத்தினர்.
இந்த சம்பவம் பள்ளிகொண்டா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story