நெல்லையில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
நெல்லையில் பெய்த பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
நெல்லை:
நெல்லையில் பெய்த பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
பலத்த மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவிலும் மழை பெய்தது. முக்கூடல், பணகுடி சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் சாரல் மழை பெய்தது.
மாலையில் நெல்லையை அடுத்த பேட்டை, கல்லூர், சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர் மழையால் பல்வேறு இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
நெல்லை பொருட்காட்சி திடல் அருகே உள்ள நெல்லை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தண்ணீரில் மிதக்கிறது. நெல்லை கலெக்டர் அலுவலகம், பாளையங்கோட்டை மகாராஜாநகர் சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு பார்வையற்ேறார் பள்ளி உள்ளதால், அங்குள்ள மாணவர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். அங்கு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அங்குள்ள விளையாட்டு மைதானம், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் குளம் போன்று தண்ணீர் தேங்கியுள்ளது.
நவீன எந்திரம் மூலம் தண்ணீர் அகற்றம்
நெல்லை சந்திப்பு பாலபாக்யநகர், பாபுஜி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு நீண்ட நாட்களாக தேங்கிய தண்ணீரில் பாசிப்படர்ந்து பச்சை நிறமாக காட்சியளித்தது. பாளையங்கோட்டை ஸ்டேட் வங்கி காலனி, பொன்மணி காலனி, வேலவர் காலனி, வசந்தம் நகர், ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை குழியில் தண்ணீர் தேங்கியதால், அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.
உடனே நெல்லை மாநகராட்சி ஊழியர்கள் நவீன எந்திரம் மூலம் தண்ணீரை அகற்றினார்கள். தாழ்வான இடங்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை ஆரோக்கியபுரம் குளம் நிரம்பி மறுகால் பாய்வதால், குளத்தின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து வருவாய் துறையினர் விரைந்து சென்று, குளக்கரையில் மணல் மூட்டைகளை அடுக்கினர். நெல்லை டவுன் நயினார் குளமும் நிரம்பி மறுகால் பாய்கிறது.
நிரம்பிய அணைகள்
பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,631 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1,390 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 136.10 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 140.75 அடியாகவும் உள்ளது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 116.70 அடியாக உள்ளது. அணைக்கு 723 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு அடவிநயினார், நம்பியாறு, கொடுமுடியாறு, வடக்கு பச்சையாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால், அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரம் குளம் நிரம்பி மறுகால் செல்லுகின்ற தண்ணீர் சாலையில் செல்வதால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி நெல்லை மாநகர பகுதியில் 24 மில்லி மீட்டரும், தென்காசி மாவட்டம் சிவகிரியில் 43 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story