தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கழிவறை தொட்டியில் மூழ்கடித்து குழந்தையை கொன்ற பெண் கைது


கைதான பெண்
x
கைதான பெண்
தினத்தந்தி 7 Dec 2021 1:05 AM IST (Updated: 7 Dec 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கழிவறை தொட்டியில் குழந்தை பிணமாக கிடந்த சம்பவத்தில் இளம்பெண் கைது செய்யப்பட்டார். திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் அடைந்ததால் அவமானத்தில் அந்த குழந்தையை கழிவறை தொட்டியில் மூழ்கடித்து கொன்றது தெரிய வந்தது.

தஞ்சாவூர்:-

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி கழிவறை தொட்டியில் குழந்தை பிணமாக கிடந்த சம்பவத்தில் இளம்பெண் கைது செய்யப்பட்டார். திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் அடைந்ததால் அவமானத்தில் அந்த குழந்தையை கழிவறை தொட்டியில் மூழ்கடித்து கொன்றது தெரிய வந்தது.

கழிவறை தொட்டியில் குழந்தை பிணம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்குள்ள கழிவறையை கடந்த 4-ந் தேதி சுத்தம் செய்வதற்காக துப்புரவு ஊழியர்கள் சென்றனர். அப்போது தண்ணீர் வரவில்லை. இதையடுத்து கழிவறைக்கு தண்ணீர் வரும் சிறிய தொட்டியை திறந்து பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிணமாக கிடந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கண்காணிப்பு கேமரா

இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு இல்லாததால் வேறு எங்காவது பிறந்த குழந்தையை அக்குழந்தையின் உறவினர்கள் இங்கே கொண்டு வந்து போட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் குழந்தை இறந்து கிடந்த கழிவறைக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் சென்று வந்த காட்சி கண்காணிப்பு ேகமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் அந்த காட்சியை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கர்ப்பிணி பெயரில் யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை என தெரிய வந்தது.

கர்ப்பிணியாக இருந்த இளம்பெண்

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் மற்ற வார்டுகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளின் விபரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர். 
இந்த விசாரணையில் கடந்த 2-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா ஆலக்குடியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததும் 4-ந் தேதியன்று அந்த பெண் அங்கிருந்து சொல்லிக்கொள்ளாமல் ஆஸ்பத்திரியில் இருந்து சென்று விட்டதும் தெரிய வந்தது.

திருமணமாகாமலேயே கர்ப்பம்

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் பன்னீர்செல்வம் என்பவரின் மகள் பிரியதர்ஷினி என்பது தெரிய வந்தது. திருமணம் ஆகாத அந்த பெண் திருப்பூரில் உள்ள ஒரு நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருடன் பணிபுரிந்த சிதம்பரத்தை சேர்ந்த வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். 
அதன் காரணமாக அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த வாலிபரிடம் பிரியதர்ஷினி கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

அவமானமாக கருதினார்

இதனைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரியதர்ஷினி சொந்த ஊருக்கு வந்துள்ளார். தான் கர்ப்பிணியாக இருக்கும் விவரத்தை யாரிடமும் சொல்லாமல் அவர் மறைத்து உள்ளார். பின்னர் தனக்கு பிரசவ தேதி நெருங்குவதை அறிந்த அவர் வயிற்றுவலி என்று கூறி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த 3-ந் தேதி நள்ளிரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. கல்யாணம் ஆகாத தனக்கு குழந்தை பிறந்தது ஊருக்குள் தெரிந்தால் அவமானம் என்று கருதிய அந்த பெண் தனக்கு பிறந்த குழந்தையை கொல்ல முடிவுசெய்துள்ளார்.

தொட்டியில் மூழ்கடித்து கொலை

இதனையடுத்து அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொலை செய்து விட்டு ஒன்றும் நடக்காததுபோல தனது வார்டுக்கு வந்து விட்டார். 
அதன் பின்னர் அங்கிருந்து எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறிவிட்டார். 
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

கைது

இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் “அந்தபெண் கடும் மன உளைச்சலில் இருப்பதால் அவருக்கு குழந்தைகள் நலக்குழுவினர் உதவியுடன் மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story