ஏரி உபரிநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
ஏரி உபரிநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியின் மதகு வழியாக நேற்று அதிக அளவில் உபரிநீர் வெளியேறியது. இந்த உபரி நீரானது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. மேலும் உபரி நீரானது பெரம்பலூர்- துறையூர் செல்லும் சாலையில் வெளியேறியது. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பெரம்பலூர்- துறையூர் இடையே டி.களத்தூர் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமரன், வருவாய் ஆய்வாளர் ரெங்கநாதன் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உபரிநீரை முறையாக வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, உபரிநீர் செல்லும் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 300 மீட்டர் நீளத்திற்கு பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகலப்படுத்தினர். இதனால் தற்போது ஓடை வழியாக நீர் சீராக செல்கிறது. மேலும் குடியிருப்பு பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறியது. இதேபோல் காரை ஊராட்சியிலும் சுமார் 200 மீட்டர் நீர்நிலை வழித்தடங்கள் சரி செய்யப்பட்டது.
Related Tags :
Next Story