‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார்பெட்டி செய்தி எதிரொலி:
புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் அரசூர் கிராமம் வடக்கு தெருவில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதனால் மின்கம்பம் இருந்த பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அரசூர் வடக்கு தெருவில் ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
-பொதுமக்கள், திருவையாறு.
பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி சாக்கோட்டை நீடாமங்கலம் மெயின் ரோட்டில் கோட்டை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த பயணிகள் நிழலக கட்டிடம் முன்பு மரத்தின் கிளைகள் அடர்ந்து வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும், பயணிகள் நிழலகத்தில் குப்பை மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழலகத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், கும்பகோணம்.
மின் விளக்கு ஒளிருமா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் புதிய நுழைவுவாயில் பகுதியில் உள்ள மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக இரவில் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி புதிய நுழைவுவாயில் பகுதியில் மின்விளக்கு ஒளிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், பட்டுக்கோட்டை.
புதிய மின்கம்பம் வேண்டும்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதி வடக்கு மடவிளாகம் தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வெங்கடேசன், திருவிடைமருதூர்.
சாலை நடுவே ஆபத்தான பள்ளம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நங்கம்படித்துறை பகுதி சோலையப்பன் தெருவில் உள்ள சாலை நடுவே ஆபத்தான பள்ளம் உள்ளது. இதில் வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி விழுந்து விடாமல் இருக்க தற்காலிகமாக பள்ளத்தின் முன்பு இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளத்தை சுற்றி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இதன்காரணமாக அந்த சாலை வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள் என அனைத்துதரப்பினரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலை நடுவே உள்ள ஆபத்தான பள்ளத்தினால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சுபத்ரா, கும்பகோணம்.
Related Tags :
Next Story