வில்லியனூரில் ரோந்து போலீசாரை தாக்கிய 2 பேர் கைது
வில்லியனூரில் ரோந்து போலீசாரை தாக்கிய 2 பேர் கைது
வில்லியனூர், டிச.7-
வில்லியனூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு போலீசார் யுவராஜ், பிரபாகரன் ஆகியோர் கோட்டைமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் மது பார் அருகே 2 பேர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டனர். உடனே அங்கு சென்ற போலீசார் யுவராஜ், பிரபாகரன் ஆகியோர், மதுபோதையில் இருந்தவர்களை எச்சரிக்கை செய்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை தரக்குறைவாக திட்டி, சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சுதாரித்துக்கொண்டு, நிலைமையை சமாளித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் கண்டமங்கலம் அருகே உள்ள தென்னல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (35), ஜெயக்குமார் (34) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தார்.
Related Tags :
Next Story