ரெயில்வே தேர்வு முடிவுகள் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்
உலகிலேயே அதிகமானோர் பங்கேற்ற ரெயில்வே தேர்வுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
உலகிலேயே அதிகமானோர் பங்கேற்ற ரெயில்வே தேர்வுக்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே தேர்வு வாரியம்
ரெயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.), பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு (NTPC) கடந்த 2019-ம் ஆண்டு விண்ணப்பிக்க கோரியிருந்தது. நாடு முழுவதும் பல்வேறு ரெயில்வே மண்டலங்களில் உள்ள 35,281 காலிப்பணியிடங்களுக்காக இந்த விண்ணப்பம் கோரப்பட்டது. அதையடுத்து, இந்த பணியிடங்களுக்கு ஒரு கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்தனர்.
சர்வதேச அளவில் அதிகமான நபர்கள் விண்ணப்பித்த தேர்வு, இந்த ரெயில்வே பணியிடங்களுக்கான தேர்வாகும். இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் விண்ணப்பங்கள் பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி முதல் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக இந்த தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது.
வதந்திகளை நம்ப வேண்டாம்
15 மொழிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது. இந்த விடைகள் குறித்து தேர்வு எழுதியவர்களிடம் இருந்து 93 ஆயிரத்து 263 கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இவை அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 15-ந் தேதி வெளியிடப்படலாம் என தெரிகிறது. அடுத்த கட்ட தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த தேர்வு முடிவுகள் குறித்து ஒரு சில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. எனவே, தேர்வு மற்றும் தேர்வு முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story