‘நான் இனிமேல் அழ மாட்டேன்’ - குமாரசாமி சொல்கிறார்


‘நான் இனிமேல் அழ மாட்டேன்’ - குமாரசாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 7 Dec 2021 2:52 AM IST (Updated: 7 Dec 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

நான் இனிமேல் அழ மாட்டேன் என்று குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:

  முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மண்டியாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அழ மாட்டேன்

  நான் இனிமேல் அழ மாட்டேன். அதற்காக நான் கனமான இதயத்தை கொண்டவன் என்று அர்த்தமில்லை. மக்களின் கஷ்டங்களை உணர்வு பூர்வமாக அணுகும்போது இதயம் மெலிந்துவிடுகிறது. அது போன்ற நேரத்தில் நான் அழுதுவிடுவேன். ஆனால் சிலர் இதை விமர்சிக்கிறார்கள். நான் "கிளீசரின்" போட்டு அழுவதாக சொல்கிறார்கள்.

  மேல்-சபை தேர்தலில் கூட்டணி வைத்து கொள்வதாக நான் எங்கும் கூறவில்லை. சமீபத்தில் பிரதமர் மோடியை தேவேகவுடா சந்தித்தார். ஆதரவு வழங்குமாறு எங்களிடம் காங்கிரசார் கேட்கவில்லை. எடியூரப்பா தான் பா.ஜனதாவை ஆதரிக்குமாறு கேட்டுள்ளார். யாருக்கு ஆதரவு என்பதை நாளை (இன்று) பத்திரிகையாளர்கள் கூட்டத்தை நடத்தி அறிவிக்கிறேன்.

குடும்ப அரசியல்

  2023-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் சொந்த பலத்தில் ஆட்சியை பிடிப்பதே எங்களின் நோக்கம். அதற்காக நாங்கள் இப்போது இருந்தே பணிகளை தொடங்கிவிட்டோம். எங்கள் கட்சி குடும்ப அரசியலை நடத்துவதாக சித்தராமையா சொல்கிறார். டாக்டரான அவரது மகனை அரசியலுக்கு அழைத்து வந்தது ஏன்?. இதை குடும்ப அரசியல் என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைக்க வேண்டும்?.

  அரசியல் சாசனத்தில் குடும்ப அரசியலுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அதனால் எங்கள் கட்சி பற்றி குடும்ப அரசியல் என்று பேசுவதை பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நிறுத்த வேண்டும். மேல்-சபை தேர்தலில் காங்கிரசில் 8 வேட்பாளர்கள் குடும்ப அரசியலில் இருந்து வந்தவர்கள்.
  இவ்வாறு குமாரசாமி கூறினார்.

  முதல்-மந்திரியாக இருந்தபோது ஒரு முறை குமாரசாமி அழுது கண்ணீர் சிந்தினார். அதற்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின்போது குமாரசாமி அழுதபடி வாக்கு சேகரித்தார். தேவேகவுடாவும் தேர்தல் பிரசாரத்தில் அழுதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story