பா.ஜனதாவில் சேராததால் என்னை சிறையில் தள்ளினர் - டி.கே.சிவக்குமார் பேட்டி
பா.ஜனதாவில் சேராததால் என்னை சிறையில் தள்ளினர் என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
பெலகாவி:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கட்டாயப்படுத்தி ராஜினாமா
நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ஆளும் பா.ஜனதா பலவீனமாக இருப்பதை நான் காண்கிறேன். மந்திரி ஈசுவரப்பா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நீக்கப்பட உள்ளதாக சொல்கிறார். முருகேஷ் நிரானி விரைவில் முதல்-மந்திரி ஆவார் என்று கூறினார். அதே மேடையில் இருந்த முருகேஷ் நிரானி, தான் முதல்-மந்திரிக்கு எதிராக சூழ்ச்சி செய்ய மாட்டேன் என்று கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு கூறவில்லை.
பா.ஜனதா அரசை மந்திரிகளே கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள். பசவராஜ் பொம்மை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். அதனால் மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மிகுந்த வேதனையில் உள்ளார். அவரை கட்டாயப்படுத்தி பா.ஜனதா மேலிடம் ராஜினாமா கடிதம் பெற்றது. அவர் பதவியை ராஜினாமா செய்தபோது கண்ணீர் விட்டு அழுதார்.
ஊழல் நிறைந்த அரசு
அதில் துக்கமும், கோபமும் அடங்கியுள்ளது. வட கர்நாடகத்தில் கனமழை-வெள்ளத்தால் பல பகுதிகள் நீரில் மூழ்கின. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு நிவாரணம் வழங்கவில்லை. நிவாரணம் வழங்காவிட்டால் கூட்டு தற்கொலை செய்து கொள்வதாக அந்த பகுதி மக்கள் மிகுந்த வேதனையுடன் கூறுகிறார்கள். இது இந்த அரசின் காதுகளில் விழவில்லை.
பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதில் இந்த பிரச்சினையை கிளப்புவோம். வட கர்நாடகத்தில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதில் கூறப்படும் பிரச்சினைகளை கூட்டத்தொடரில் எழுப்புவோம். நாட்டிலேயே பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா அரசு அதிக ஊழல் நிறைந்த அரசாக உள்ளது.
பிரதமருக்கு கடிதம்
1 லட்சம் உறுப்பினர்களை கொண்ட அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம், பிரதமருக்கு கடிதம் எழுதி மந்திரிகள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள் என்று புகார் கூறியது. யார்-யார் எவ்வளவு கமிஷன் கேட்கிறார்கள் என்பது குறித்து அவர்கள் ஒரு அறிக்கையை வழங்கியுள்ளனர். அதன் மீது மாநில அரசு விசாரணை நடத்தாதது ஏன்?. நான் பா.ஜனதாவில் சேராததால் என்னை திகார் சிறையில் தள்ளினர்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story