2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டால் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமாக இருக்காது - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி


2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டால் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமாக இருக்காது - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2021 2:56 AM IST (Updated: 7 Dec 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டால் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருக்காது என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

பெங்களூரு:

  கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

லேசான பாதிப்புகள்

  கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சிலரது மாதிரிகள் மரபணு வரிசை பகுப்பாய்வு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் முடிவு வரவேண்டியுள்ளது. அந்த ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளான டாக்டருக்கு லேசான பாதிப்புகள் தான் இருந்தன. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் பாதிப்பு தீவிரமாக இருக்காது என்பதற்கு அவர் நல்ல உதாரணம் ஆகும்.

  அதனால் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும். அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் பரவலையே வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டோம். அந்த டெல்டாவை விட இந்த ஒமைகரான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை. ஆனால் வேகமாக பரவக்கூடிய தன்மையை கொண்டது.

அனைவருக்கும் முதல் டோஸ்

  கர்நாடகத்தில் 93 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டு இருக்கிறோம். 64 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுள்ளோம். அதிக தடுப்பூசிகளை செலுத்திய மாநிலங்களில் கர்நாடகம் தேசிய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. வருகிற டிசம்பருக்குள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

  கர்நாடக அரசிடம் இன்னும் 70 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. அதனால் இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் தாமாக முன்வந்து அதை போட்டுக்கொள்ள வேண்டும். கடந்த கால வரலாற்றுகளை பார்த்தால் வைரஸ் பரவலின் 2-வது அதிகமாக இருக்கிறது. அதன் பிறகு வரும் அலைகள் குறைவாக இருக்கிறது. அதனால் கொரோனா 3-வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றே கருதுகிறேன்.

முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்

  இந்த ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை என்று உலக நாடுகளில் இருந்து தகவல்கள் வருகின்றன. அதனால் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் பயப்பட வேண்டியது இல்லை. ஆயினும் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
  இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story